ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சீயான் விக்ரம்
நடிகர் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.
இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக், வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.