“ஒன் வே” படக்குழுவினரை வாழ்த்திய நடிகை குஷ்பு
ஜி.குரூப் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபஞ்சன் தயாரிப்பில், எம்.எஸ்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் படம் ‘ஒன் வே’. இதில் கதையின் நாயகனாக பிரபஞ்சன் நடிக்க, கோவை சரளா, ஆரா, அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், அகத்தியன், பேரரசு, விஜய்ஸ்ரீ ஜி, தயாரிப்பாளர் கே.ராஜன், எழுத்தாளர் கரண் கார்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் எம்.எஸ்.சக்திவேல் பேசுகையில், “இந்த கதையை கேட்ட உடனே தயாரிக்க பிரபஞ்சன் ஒப்புக் கொண்டார். அதுமட்டும் இன்றி, என்னை சுதந்திரமாக பணியாற்ற வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜாவை தான் இசையமைக்க வைக்க இருந்தோம். ஆனால், பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்காததால் என்ன செய்வது என்று யோசித்தோம். அப்போது தான் ஆடிசன் வைத்து இசையமைப்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இசையமைப்பாளருக்கு ஆடிசன் வைத்தது நாங்களாக தான் இருப்போம். ஏழு இசையமைப்பாளர்கள் வந்தார்கள், அவர்களில் அஷ்வின் மிக சிறப்பாக செய்தார். அவருடைய வேலை எங்களுக்கு பிடித்தது அதனால் அதான் அவரை இசையமைப்பாளராக நியமித்தோம். அவரும் மிக சிறப்பாக பணியாற்றி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்த படத்தில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இருக்கிறது. ஒரு சர்ப்ரைசும் படத்தில் இருக்கிறது. அதாவது சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு பான் இந்தியா படம் தான் ‘ஒன் வே’. சின்ன படம் என்று சொன்னாலும் படம் பார்க்கும் போது சின்ன படமாக தோன்றாது. அந்த அளவுக்கு படம் இருக்கும். எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்திருக்கிறோம், படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள் என்றார்.
நடிகை குஷ்பு பேசுகையில், “இன்று சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. ஒரு படம் நல்லா இருந்தாலே இந்தியா முழுவதும் வெற்றி பெறும், அதற்கான பிளாட்பார்ம் நிறைய வந்துவிட்டது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். காரணம், என் அண்ணனை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்காக தான் நான் இங்கு வந்தேன். ‘ஒன் வே’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மிகப்பெரிய விஷயம் இருக்கு என்று தெரிகிறது. படத்தில் அனைத்தும் மிக நன்றாக வந்திருக்கிறது. இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக இருக்கிறது.
இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் அஷ்வினுக்கு என் வாழ்த்துகள். ஒரு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் அந்த படத்திற்கு உயிர் கொடுக்கும். இளையராஜாவின் பின்னணி இசை பல படங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்படி தான் இந்த படத்தின் பின்னணி இசையும் மிக சிறப்பாக உள்ளது. எந்த இடத்தில் இசை வர வேண்டும், எந்த இடத்தில் இசை இல்லாமல் மவுனமாக இருக்க வேண்டும், என்பதை அஷ்வின் மிக தெளிவாக செய்திருக்கிறார். எனவே, இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக தரமான படமாக இருப்பதோடு, மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்றார்.