மீண்டும் நடிக்க வந்த கவர்ச்சி நடிகை “பபிதா” – ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்குமா..?.!
பபிதா… தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு ஈடான பெயர், புகழை பெற்றவர். இது தீபாவளி சீசன். இந்த நேரத்தில் அவர் நடனமாடி புகழ்பெற்ற ஒரு பாடலை சொன்னால் பொருத்தமாக இருக்கும். அது.. உலக நாயகன் கமல்ஹாசனின் ‘நாயகன்’ படத்தில் வரும் “நான் சிரித்தால் தீபாளி..” பாடல். அந்தப்பாடலில் அவரது அழகு நடனம் அனைவரையும் வசீகரிக்கவைத்தது.
இது தவிர இயக்குனர் கே.பாக்யராஜின் ‘சின்னவீடு’ படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமானது. நடிகர் விஜய்யின் ‘ரசிகன்’ படத்தில் ”பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி..” பாடலில் பபிதாவின் நடனம் பிரபலம். விஜயகாந்துடன் ‘கூலிக்காரன்’, டி.ராஜேந்தருடன் ‘ஒரு தாயின் சபதம்’, கார்த்திக்குடன் ‘ நட்பு’, ’பூவே பூச்சூடுவா’ (இரண்டாம் நாயகி) உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம், இந்தி என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பபிதா, அன்றைய கவர்ச்சி கன்னிகளில் ஒருவர். இவர், பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாகவும் பின்னாளில் எம்ஜிஆருக்கு நெருக்கமான விசுவாசியாகவும் இருந்த நடிகர் ஜஸ்டினின் மகள்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பபிதா, சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் லக்ஷா கதாநாயகியாக நடித்த ‘காதலை மறந்தேன்’ படத்தை தயாரித்திருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க களமிறங்கிவிட்டார் பபிதா.
” உலகநாயகன் கமல்ஹாசன், இளைய தளபதி விஜய், திரைக்கதை மன்னன் பாக்யராஜ், சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர், நவரச நாயகன் கார்த்திக் உட்பட பல ஹீரோக்கள் படத்தில் நான் நடித்துவிட்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல இப்போது மீண்டும் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
”என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்ஜிஆர் படங்களில் நடித்து பின்னாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது. உலக நாயகன் படத்தில் நான் நடனமாடியெதெல்லாம் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இப்போதும் அவர் நடிக்க அழைத்தால் தயாராக இருக்கிறேன். ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கும் நான் அதாவது ”பபிதா சிரித்தால் தீபாவளிதான்” என்னும் ரசிகர்கள் நிறைய.
இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது. என் இரத்தத்தில் நடனம் என்பது ஊறியுள்ளது. அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச்சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் வெளுத்துவாங்க தயாராக இருக்கிறேன்.
நடிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தப்பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கேரக்டர் பேசும்படியாக இருந்தால் நான் நடிக்க தயார்” என்கிறார். பபிதா இரண்டாம் இன்னிங்ஸ் ஆட தயாராகிவிட்டார்.