எதிர்மறையான எண்ணங்களை வெல்வது எப்படி ? “நித்தம் ஒரு வானம்” இயக்குனர் விளக்கம்

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும், வாழ்வீயலையும் மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னை வடபழனியிலுள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர் ,பாடலாசிரியை கிருத்திகா நெல்சன், பின்னணி இசையமைப்பாளர் தரண் குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, கலை இயக்குநர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் சாகர் பேசுகையில், ” கொரோனாத் தொற்றுப் பாதிப்பு முன்னரே இந்த படத்தினைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனாக் காலகட்டத்தின் போது சற்று பயம் ஏற்பட்டது. கடவுளின் அருளால் அனைத்தும் இனிதாக நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய ஏழு ஆண்டு கனவு இது. நாங்கள் பணத்தை மட்டும் முதலீடு செய்திருக்கிறோம். இந்தப் படைப்பை முழுவதும் அவர் தன் தோளில் சுமந்து நிறைவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால், அந்த வெற்றி முழுவதும் இயக்குநர் கார்த்திக்கைத் தான் சாரும்.

இந்தப் படத்தில் விளம்பரத்தில் மூன்று கெட்டப்புகளில் நாயகன் அசோக் செல்வன் தோன்றுகிறார். ஆனால் படத்தில் இதை தவிர்த்து நான்காவதாக ஒரு கெட்டப்பில் அசோக் செல்வன் வருகிறார். அது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அசோக் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் வெயில், மழை, பனி என ஒவ்வொன்றிலும் ஈடு கொடுத்து கடுமையாக உழைத்திருக்கிறார். நடிகைகள் ரித்து வர்மா அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நடிகைகளும் தங்களது பணிகளை அற்புதமாக வழங்கி இருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, பின்னனி இசை என அனைத்தும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. காதலும் இசையும் கலந்த ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


நடிகை ரிது வர்மா பேசுகையில், ” இந்தப் படத்தில் இயக்குநர் ரா. கார்த்திக் எழுதிய சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய கற்பனையில் உதித்த அந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக திரையில் கொண்டு வந்திருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை ஷிவாத்மிகா ராஜசேகரும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் ஒரு பிறவி நடிகை என்பதால் இயற்கையாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இளமையும், புதுமையும் தான் இந்தப் படத்தின் ரசிகர்களை கவரக்கூடிய அம்சம். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகைத் தந்து பாருங்கள். இந்த படைப்பு உங்களை ஏமாற்றாது” என்றார்.

நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் பேசுகையில், ” இந்தப் படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகையாக சிறந்த கதையும், கதாபாத்திரமும் கிடைக்காதா..! என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். இந்த எதிர்பார்ப்பு மீனாட்சி கதாபாத்திரம் மூலம் சாத்தியமானது. இதற்காக இயக்குநருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிகைகள் ரிதுவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது. மிக அரிதாகத்தான் இது போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நவம்பர் நான்காம் தேதியன்று ‘நித்தம் ஒரு வானம்’ திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு உணர்வு பூர்வமான.. அழகான.. இளமையான.. வாழ்க்கைக்கு தேவையான.. கதை. அதனால் குடும்பத்துடன் சென்று ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் ரா கார்த்திக் பேசுகையில், ” நித்தம் ஒரு வானம் படத்தின் கதையை எழுதி, தற்போது படம் நிறைவடைந்திருக்கும் வரை ஏழு ஆண்டுகளாகி இருக்கிறது. ‘வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் காத்திரு’ என்பார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றது. எந்த நோக்கத்தில் இந்த படத்தின் கதையை எழுதினேனோ.. அதனை முழுவதுமாக.. நேர்த்தியாக படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். நான் படைப்பாளனாக கதையை சொல்லும்போது அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். நம்மை சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஒரு நெருக்கமான பிணைப்பு இருக்கும். அதனை உணர்வுபூர்வமாக திரையில் சொல்ல வேண்டும் என நினைப்பேன். அதனை சொல்லி இருக்கிறேன். இந்த படத்தை பார்த்த பிறகு உங்களுடைய மனதில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நேர் நிலையான தாக்கம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன். படம் பார்க்கும் முன் உங்களுடைய மனதில் அழுத்தங்கள் இருந்தாலும், நெருக்கடிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இந்த படம் சிறிய அளவிலான மன நிம்மதியையும், ஒரு புன் சிரிப்பையும் உங்களிடத்தில் உண்டாக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

கதையை இன்பச் சுற்றுலா செல்வது போல் எழுதி விட்டேன். இதனை காட்சி பூர்வமாக உணரும் தயாரிப்பாளரால் தான் தயாரிக்க இயலும். இதனை தயாரிப்பாளர் சாகர் உணர்ந்து முழு ஒத்துழைப்பு அழைத்து தயாரித்திருக்கிறார். கதை சென்னையில் தொடங்கி கொல்கத்தா, சண்டிகர், மணாலி, கேரளா, பொள்ளாச்சி என நீண்ட தூர பயணத்தைக் கொண்டிருக்கிறது.

நேர்மையாக ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தை பார்வையிட்ட தணிக்கை துறை அதிகாரிகள் எந்த ஒரு வெட்டும் இல்லாமல் யூ சான்றிதழை வழங்கி பாராட்டினார்கள். இந்தத் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம்பெறவில்லை. அதனால் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தை குடும்பத்துடன் ஏன் பார்க்க வேண்டும்? என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் முழுவதும் மக்கள் ‘எதிர் நிலையான எண்ணங்களை வெல்வது எப்படி?’ என்பதைத்தான் அதிகளவில் தேடி இருக்கிறார்கள். நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையிலான எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாக பார்ப்பதில்லை. முக கவசம் அணிந்து, அணிந்து அசலான முகத்தை தொலைத்து விட்டோம். இத்தகைய நிலையில் யாரேனும் நம்மை உத்வேகம் படுத்த வேண்டும்… நம் தோளில் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும்… என்ற ஏக்கம், ஆதங்கம் மனதிற்குள் இருக்கிறது. ‌ பணப்பிரச்சனை, மனப்பிரச்சனை இதற்கு இடையில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வாழ்க்கை மீது ஒரு சதவீத அளவிலாவது நேர் நிலையான எண்ணத்தை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். ” என்றார்.

இதனிடையே இந்த நிகழ்வில் வருகை தந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தில் இடம்பெற்ற பாடலை நடிகை ரிது வர்மா, நடிகர் அசோக் செல்வன் ஆகியோர் மேடையில் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button