“D 3” படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிறேன், கதாநாயகன் பேச்சு.!

நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து ‘ D 3 ‘என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன் ஜி , நடிகர் அபிஷேக், கூல் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தின் இயக்குநர் பாலாஜி பேசும்போது…”இது ஒரே நாளில் நடக்கும் கதை. இந்தப் படத்தின் வரிசையில் D2, D1 படங்களையும் உருவாக்க இருக்கிறோம். ஒரு விபத்து, ஒரு கொலை, ஒரு காணவில்லை கேஸ் என்ற மூன்றையும் பின்னணியாக வைத்து இந்தக் கதை உருவாகி இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்கள் என்றாலே மனித உழைப்பைக் கடுமையாகக் கொடுக்க வேண்டி இருக்கும்.
படப்பிடிப்பு நாட்களில் ஏழு நாட்கள் 24 மணி நேரமும் கூட படப்பிடிப்பு நடந்தது. அந்த அளவிற்கு உழைத்தோம். சினிமாவில் யாரும் எளிதாக மேலே வர முடியாது. பிரஜின் போன்ற உழைப்பாளிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டு. அவருக்கான  இடம் நிச்சயம் கிடைக்கும்.இந்தப் படம் பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் கடந்து தான் உருவாகி இருக்கிறது.

இந்தப் படம் நாட்டின் ஒரு முக்கிய பிரச்சினை பற்றிச் சொல்கிறது.இந்த படத்தைப் பார்த்தால் வெளியே யாரிடமும் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் குடிக்க கூட யோசிக்கிற நிலை வரும்.

இது திகில்பட காலம் என்கிறார்கள். ஆனால் யாரும் வேண்டுமென்றே அப்படி எடுப்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில் இந்த வகை படங்கள் தான் எடுக்க முடியும். அதனால் தான் இதை நான் எடுத்திருக்கிறேன். இது ஒரே இரவில் எழுதிய கதை என்று சொல்லலாம். பீமாஸ் கிரிக்கெட் கிளப் என்று இருந்த நண்பர்கள் குழு தயாரிப்பு நிறுவனமாகி உள்ளது என்றார்.

நடிகர் பிரஜின் பேசும்போது…
“நான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறேன் 19 ஆண்டுகளாக இந்த ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 24 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன் .நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை.பாதியில் நின்று போனதில்லை.

நான் முதல் முதலாக போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன். எனது அப்பா காவல்துறையில் இருந்தவர் தான். தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை. இது  ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கதை கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாக ஓடி இருக்கிறேன்.

படம் பண்ணுவதை விட இன்று அதை விளம்பரப்படுத்துவது சிரமமாக உள்ளது. நாங்கள் முடிந்தவரை அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதற்குப் பலரும் ஒத்துழைத்தார்கள். இந்தப் படத்தின் போஸ்டர்கள் பேசப்பட்டன. என் சினிமா, தொலைக்காட்சி அனுபவங்களில் இந்தப் படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது. நிறைய நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடந்தது. அனைவரும் நன்றாக ஒத்துழைத்தனர்.

விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. இருக்கிற நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத அளவுக்கு நான் முட்டாள்  இல்லை. எனவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். முடிந்தவரை உழைத்திருக்கிறேன் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்”என்றார்.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் பேசும் போது…”இந்த விழாவுக்கு என்னை சாம், மோகன் ராஜ் அழைத்தார்கள். எனக்கு இப்போது இவர்களையெல்லாம் பார்க்கும்போது, சென்னை 28 பட அனுபவம் ஞாபகம் வருகிறது. அது முழுக்க முழுக்க நண்பர்களைப் பற்றியது. நண்பர்களின் கூட்டணியால் வெற்றி பெற்றது. அதேபோல் இங்கு உள்ளவர்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது.  நான் அரசியல் பணிக்குச் சென்று விட்டதால் சினிமாவில் சற்று இடைவெளி வந்தது போல் உள்ளது. அப்பா விட்டுச் சென்ற அரசியல் பணியையும் தொழிலையும் நான் செய்து வருகிறேன். நான் எல்லாவற்றிலும் முழு முயற்சியோடு இருப்பேன். எந்த வேலையிலும் ரசித்துச் செய்தால் வெற்றி உண்டு. உண்மையாக உழைத்தால் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஜெயிக்கலாம். முழு மனதுடன் எதையும் செய்ய வேண்டும். அப்படி மக்களுக்குச் சேவை செய்யவே நான் அரசியலில் இருக்கிறேன். இந்தச் சினிமா விழாவில் சிலகால இடைவெளிக்குப் பின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். D3 படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் “என்றார்.

இயக்குநர் மோகன் ஜி பேசும் போது… எனக்கு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. இருந்தாலும் முட்டி மோதிக் கற்றுக் கொண்டேன். நான் பழைய வண்ணாரப்பேட்டை படம் எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர்களுக்கு எடுத்தது ஏதாவது போட்டுக் காட்ட வேண்டும் என்று நானும் பிரஜினும் நிறைய சிரமப்பட்டு இருக்கிறோம். அப்போது ஒரு 70 எம்எம் கேமராவை வைத்துக் கொண்டு நானும் பிரஜினும் அலையாத அலைச்சல் இல்லை. சென்னை முழுக்க  சுற்றிச் சுற்றி அலைந்து எடுத்தோம்.
அப்படி என்னுடன் அவர் நான்கு வருடங்கள் என் கூடவே வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட உழைப்பாளிஅழைத்ததற்காகத்தான் இங்கே நான் வந்துள்ளேன்.

அவர் ரசிகர்களிடம் ஒரு சார்மிங் கதாநாயகனாக வர வேண்டியவர், ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. எனது அடுத்தடுத்த படங்களில் அவரைப் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அவருக்கேற்ற மாதிரி கதை அமைவதில்லை. அந்த அளவுக்கு எனது படங்களின் பாதை மாறிவிட்டது. பிரச்சினையான கதைகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் முதல் காட்சியிலேயே அவர் அதிர வைக்கிறார்.

சினிமா படம் எடுப்பதும் இன்று அதை வியாபாரம் செய்வதும் சாதாரணமான ஒன்றல்ல. தினந்தோறும் தடைகளையும் பிரச்சினைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் போராடிக் கொண்டிருக்கிறோம் விடமாட்டோம். எனது இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு அடுத்து நான் எடுத்துள்ள பகாசுரன் தியேட்டரில் போட்டால் நிச்சயமாக வெற்றி பெறக் கூடிய படம். முதல் நாளே 80 சதவீதம் கூட்டம் வருவதற்குத் தயாராக உள்ளது. எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. இருந்தாலும் மற்ற வியாபார விஷயங்களுக்காக அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த D3 படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர். மனோகர் பேசும்போது… நான் எத்தனையோ விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தச் சினிமா விழா மேடை எனக்கு மிகவும் புதியது. இது முதல் மேடை தான் என்று சொல்வேன். நான் சினிமா பார்த்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது உங்களையெல்லாம் பார்க்கும் போது சினிமா பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது. இவர்களது உழைப்பைப் பார்க்கும் போது அதை மனிதர்கள் அங்கீகரிக்கிறார்களோ இல்லையோ ஆனால் உண்மையான உங்கள்  உழைப்பை இறைவன் அங்கீகரிப்பான் என்று நான் சொல்வேன். முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களின்  குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி இந்திய மக்களுக்காக 3500 கிலோ மீட்டர் நடக்கிறார். அவர் தினந்தோறும் எவ்வளவு தூரம் நடக்கிறார் எவ்வளவு மக்களைச் சந்திக்கிறார். எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்று கவனியுங்கள். அதையும் உங்கள் படங்களில் காட்டுங்கள்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button