நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் “ஹனு-மேன்” படத்தின் டீஸர் வெளியீட்டு தேதி அறிவிப்பு
தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஹனு-மேன்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஹீரோ ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செடவில் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் டீசர் நவம்பர் 15 ஆம் தேதியன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்புக்காக நாயகன் தேஜா சஜ்ஜா தோன்றும் பிரத்யேக புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கும் நாயகன் தேஜா சஜ்ஜா, ஒரு மலை மீது நின்று கொண்டு சங்கு மூலம் சத்தம் எழுப்புவது போல் தோற்றமளிக்கிறார். அவர் வித்தியாசமான பல வண்ணங்கள் கொண்ட சட்டையையும், பாரம்பரிய முறையிலான வேட்டியையும் அணிந்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவரின் உடல் மொழி மாற்றம் பெற்றிருப்பது புகைப்படத்தின் மூலம் தெரிய வருகிறது. மேலும் நீண்ட முடி மற்றும் தாடியுடன் அவர் தோன்றுவது சூப்பர் ஹீரோ எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மேன்’ திரைப்படம், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
பிரசாந்த் வர்மா – தேஜா சஜ்ஜா – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் பான் இந்திய திரைப்படமாக தயாராகி, வெளியாகவிருக்கும் ‘ஹனு- மேன்’ படத்தின் டீசர் நவம்பர் 15 அன்று வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.