மோசடி வழக்கில் கைதானவர் தேவர் வேடத்திலா…?
பசும்பொன் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி தேவரின் ஆசியை பெறுவது வழக்கம்.
இந்நிலையில் தேவரின் வாழ்க்கை வரலாற்றுக் கதை தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக எடுப்பதாகவும் அந்தப் படத்தில் தேவராக நடிப்பதாகவும் பசீர் என்பவர் விளம்பரங்கள் செய்து வருகிறார். பசீர் யார் என்று தெரியாமல் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
தேசியத் தலைவர் படத்தில் தேவராக நடிக்கும் பசீரின் பின்புலத்தை விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை வகித்தவர்.இன்னும் சில மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் தன்னை ஒரு அதிமுக நிர்வாகி என்று கூறிக் கொண்டும், தலைவர்களிடம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் சொகுசு கார்களில் சுற்றி வந்துள்ளார்.இவரை சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த போதும், தற்போதும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
உதாரணமாக துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் சொகுசு கார் வாங்கித் தருவதாக கூறி 7 லட்சத்தை வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றியதால் இவர் மீது 384 ( மிரட்டி பிடுங்குதல் ), 506/2 ( மிரட்டல் ) மற்றும் 420 ( மோசடி ) போன்ற பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் இவரை சிறையில் அடைத்தது குறிப்பிடத் தக்கது. ( மற்ற வழக்குகள் விரிவான செய்தியில் பார்க்கலாம் )
தேசியமும் தெய்வீகமும் தனது இருகண்களாக பாவித்து வாழ்ந்து லட்சோப லட்ச மக்களின் இதயங்களில் வாழ்ந்து வரும் பசும்பொன் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிப்பதற்கு பசீர் போன்ற மோசடி வழக்குகளில் சிக்கியவர்களை தேர்வு செய்தது தேவர் இனத்தையும், தேவரின் புகழையும் கலங்கப் படுத்துவதற்காகவா ? என்கிற சந்தேகம் எழுகிறது.