சினிமாவிலும் ஜாதி பார்க்கிறார்கள், நடிகர் விஜய் விஷ்வா வருத்தம் !

இதுவரை ஒரு வளரும் நடிகராக இருந்து 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள அபி சரவணன் இப்போது விஜய் விஷ்வா என்று பெயர் மாற்றிக்கொண்டு புதிய நம்பிக்கையோடு புதிய பட வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அவரது பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்துள்ள ‘பரபரப்பு’ மற்றும் ‘கும்பாரி’ படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இன்று நடிகர்கள் விஷால் , விஜய் சேதுபதி, நட்டி நடராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

திரையுலகில் தங்கள் உழைப்பால் தங்களுக்கான பாதையை அமைத்துக் கொண்ட விஷால், விஜய் சேதுபதி, நட்டி நடராஜ் போன்றவர்கள் , திரையுலகில் தனக்கான இடத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் விஜய் விஷ்வாவின் உழைப்பை அங்கீகரித்து ஃபர்ஸ்ட் லுக்கை மனமுவந்து வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது பிறந்தநாளை ஒட்டி விஜய் விஷ்வா பேசும்போது,

“நான் கடந்த டிசம்பர் 2021-ல் அபிசரவணன் ஆக இருந்தபோது ஏதோ என்னிடம் குறைவது போல் உணர்ந்தேன். நம்பிக்கையாக சொல்லிக் கொள்ளும்படியான பட வாய்ப்புகள் பற்றி என்னால் அப்போது பேச முடியவில்லை. 2022-ல் விஜய் விஷ்வாவாக மாறி இப்போது நான் நடித்து வெளியாகும் அளவிற்கு பரபரப்பு, கும்பாரி என இரண்டு நம்பிக்கை தரும் படங்கள் கையில் உள்ளன.இதில் பரபரப்பு விரைவில் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படம் மார்ச்சில் வெளியாகும் திட்டத்தில் உள்ளது. அது மட்டுமல்லாமல் வெப் சீரிஸ், புதிய படங்கள் என வரிசையாக வாய்ப்புகள் வந்துள்ளன.

அந்த வகையில் எனக்கு இந்தப் பெயர் மாற்றம் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.அபி சரவணன் என்ற பெயரில் எனக்கு எந்த வெறுப்புமில்லை. ஆனால் இசையமைப்பாளர் ஜிப்ரானின் தந்தை இப்படிப் பெயர் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறிய ஆலோசனைப்படி இதை மாற்றி இருக்கிறேன். அதன் பின் மாற்றத்திற்கான , வளர்ச்சிக்கான அறிகுறிகள் எனக்குத் தென்பட ஆரம்பித்துள்ளன.

பரபரப்பு படத்தில் நான் முதன் முதலாக போலீஸ்கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளார்கள். லோகு, லால், கோபி இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.சி.எம். லோகு இயக்கியுள்ளார்.

அடுத்து கும்பாரி என்ற படம். அதில் நான் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். முழுக்க முழுக்க கன்னியாகுமரியில் கடலும் கடல் சார்ந்த பகுதி என்கிற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள படம்.இதில் ஒரு கிராமத்து இளைஞனாக நான் வருகிறேன். எனக்கு இது ஒரு சவாலான மற்றும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
குமாரதாஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.புதிய வித்தியாசமான கதை என்று அவர் ஊக்கம் கொடுத்து இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார். இப்படத்தில் சாம்ஸ், பருத்தி வீரன் சரவணன், காதல் சுகுமார் , மதுமிதா என நடித்துள்ளார்கள். என் ஜோடியாக மகா நடித்துள்ளார்.இந்தப் படம் தமிழ், மலையாள மொழிகளில் உருவாகியுள்ளது.

இன்னொரு பட வாய்ப்பு ஒரு பெரிய நிறுவனத்தில் நான் ஒரு முன்னணிக் கதாநாயகிக்கு ஜோடியாக இரண்டாவது கதாநாயகனாக நான் நடித்துள்ளேன். எனது காட்சிகளுக்கு சித்து ஸ்ரீராம் பின்னணி பாடியுள்ளார். அது மகிழ்ச்சியான அனுபவம், ஏனென்றால் அவர் மிகப்பெரிய நட்சத்திரங்களுக்காகப் பாடியவர் . என்னுடன் நடித்த அந்தப் பிரபல ஜோடி யார் என்பது பிறகு வெளியில் சொல்வேன். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

அதன் பிறகு எனது அடுத்த மகிழ்ச்சியான செய்தியாக நான் சொல்ல விரும்புவது வெப் சீரீஸ் இரண்டில் நான் நடித்து வருகிறேன். அந்த வகையில் புதிய பெயர் புதிய வாழ்க்கை புதிய வாய்ப்புகள் என்று மாற்றத்தை நான் உணர்கிறேன்.

ஒரு முன்னேற்றத்திற்கான முதல் முதல் படி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். இன்னும் பல படிகள் மேலேற வேண்டும். எனக்கு முன்பாக நூறு பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் நூறாவதாக ஓடுகிறேன் என்பதில் எனக்குப் பெருமை. ஆனால் எனது முயற்சியால் உழைப்பால் பல படிகள் மேலேறுவேன் என்பது எனது நம்பிக்கை. நான் நடித்து பிரம்ம முகூர்த்தம் என்ற படம் வெளியாக இருக்கிறது. விஜய் இயக்கியிருக்கிறார். அது முழு இரவில் நடக்கும் கதை .வித்தியாசமான அனுபவம்.

அடுத்து வானவன் என்கிற படம், இன்னொரு வாய்ப்பு. மூன்று மணி நேரத்தில் ஒரு இரவில் நடக்கும் கதை இது.இதற்காக 40 நாட்கள் இரவு முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது வானவன் படத்திற்காக முழுக்க முழுக்க இரவில் நடித்துவிட்டு , பரபரப்பு படத்திற்காக பகலில் நடிக்கச் செல்வேன். இப்படி மூன்று நான்கு நாட்கள் தூக்கமில்லாமல் தொடர்ச்சியாக நான் நடித்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் கடின உழைப்புக்கு மதிப்பு கொடுப்பவர்கள். எனது உழைப்பையும் எனது பங்களிப்பையும் பார்த்துவிட்டு அவர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என்கிற என்கிற நம்பிக்கை எனக்குள்ளது. ஏனென்றால் அந்த அளவுக்கு நாங்கள் உழைத்திருக்கிறோம்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில் உருவான ஆல்பத்தில் நான் நடித்துள்ளேன். அதேபோல் வித்யாசாகர், ரகுநந்தன், ஸ்ரீதர், ப்ரியா ஆகியோர் இசையமைப்பில் உருவான இசை ஆல்பங்களில் நான் நடித்திருக்கிறேன்.இப்படித் திரைப்படம், ஓடிடி,மியூசிக் ஆல்பம் என்று அனைத்து தளங்களிலும் எனது பங்களிப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்குத் திருப்தியாக இருக்கிறது”என்றார்.

இத்தனை ஆண்டு திரை உலகப் பழக்கத்தில் பெரிய இயக்குநர்கள் ஏன் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை ? என்று கேட்ட போது,

”என்னைக் கேட்டால் சாலிகிராமத்தில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உதவி இயக்குநரும் பெரியஇயக்குநர்கள் தான். படம் இயக்கியவர்களையும் அப்படித்தான் சொல்வேன். அவர்களுக்கான நேரம் காலம் சரியாக அமையும் போது அவர்கள் பெரிய இயக்குநர்களாக வருகிறார்கள். எனவே நான் பெரிய சிறிய என்று பிரித்துப் பார்ப்பதில்லை.

வளர்ந்த இயக்குநர்கள் எனது வாய்ப்பு பற்றிக் கூறும் போது அனைவரும் சொல்லும் பதில் இதுதான். நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் எல்லாருக்கும் முகம் தெரிந்த கதாநாயகன் ஆகிவிட்டீர்கள். எங்கள் படங்களில் அதற்கான வாய்ப்பு வரும்போது சொல்கிறோம்.இதைத்தான் பதிலாகச் சொல்கிறார்கள்”என்கிறார்.

உங்களுக்குச் சரியான திருப்பு முனைப் படங்கள் அமையாத காரணம் என்ன? என்று கேட்டபோது.

“நான் என்னை வைத்து படங்கள் இயக்கிய இயக்குநரையோ தயாரிப்பாளரையோ குறை சொல்ல மாட்டேன் . அவர்கள் சொன்ன கதையில் அவர்கள் தயாரிப்புத் திட்டத்தில் நான் நம்பிக்கை வைத்து நடித்தேன்.அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகத்தான் செய்தார்கள் என்று தான் சொல்வேன். இயக்குவதில் இயக்குநரும் செலவுகளைச் செய்வதில் தயாரிப்பாளரும் எந்தக் குறைகளையும் வைக்கவில்லை.அந்த வகையில் நான் நடித்து சமீப காலங்களில் கேரள நாட்டிளம் பெண்களுடனே,டூரிங் டாக்கீஸ் ,சாயம் என மூன்று படங்கள் வந்திருந்தாலும் அவை மக்களைச் சரியாக சென்றடையவில்லை என்று சொல்ல வேண்டும் .அதற்குத் திரை உலகில் காட்டப்படும் பெரிய படம், சிறிய படம் என்ற பாகுபாடு ஒரு காரணம் என்பேன். சிறிய படங்களுக்கு ஒதுக்கப்படும் திரையரங்குகளும் காட்சிகளுக்கான நேரமும் பெரிய பிரச்சினையாக உள்ளது.

பெரிய படமாக இருந்தாலும் சிறிய படமாக இருந்தாலும் எல்லாரும் ஒரே மாதிரி தான் உழைக்கிறார்கள். ஆனால் வெளியிடுவதில் பாகுபாடு காட்டுகிறார்கள். போஸ்டர் ஒட்டுவதில் கூட இந்தப் பாகுபாடு இருக்கிறது. அதிகாலை 2 மணிக்கு எனது போஸ்டர் ஓட்டினால் இரண்டு பத்துக்கு இன்னொரு படத்தின் போஸ்டரை அதன் மேலேயே ஒட்டுகிறார்கள்.தயாரிப்பாளர் சங்கம் முன் வந்து இந்த விஷயத்தில் தலையிட்டு சரியான வரைமுறைகளை வகுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்தப் பாகுபாடு மறையும் என்று நான் நினைக்கிறேன்.சிறிய படங்கள் ஓடுவதற்கு ஒரு வார காலமாவது அவகாசம் தர வேண்டும்.

புதிய படங்களை ஆதரிக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய புதிய படத்திற்குப் பின்னாலும் இயக்குநர்கள் , நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று நூறு குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு சிறிய படங்கள் வெளிவருவதற்கு தயாரிப்பாளர் சங்கம் திட்டங்கள் வகுத்து திரையரங்குகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.அனைத்திற்கும் தாய் சங்கமாக இருக்கும் அவர்கள் இதைச் செய்ய வேண்டும்.”என்றார்.

சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறதா? என்று கேட்டபோது,

“சிலர் இப்படித் தங்கள் சாதியை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.அப்படிப்பட்ட படங்கள் எடுக்கிறார்கள்.எல்லாருமே இப்படிப் பார்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சினிமாவில் சாதி பார்க்கப்படுகிறது என்கிற உண்மையை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.” என்றார்.

இப்போதைய சூப்பர் ஸ்டார் யார் என்று விஜய் விஷ்வாவிடம் கேட்டபோது,

“இப்போது சூப்பர் ஸ்டாராக ரஜினி சார் தான் இருக்கிறார். அவருக்குப் பின் அதைப் பற்றி யோசிக்கலாம் .ஆனால் எப்போதும் தகுதியான ஒருவருக்குத்தான் அந்த மகுடம் போய்ச் சேரும் என்று நான் நினைக்கிறேன்”என்றார்.

அபி சரவணன் ஆக இருந்தபோது தொடர்ந்து வந்த சமூக சேவைகள் இப்போதும் தொடருமா என்ற போது,

“நான் இப்படி உதவிகள் எப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அப்படி நான் செய்யும் சில உதவிகள் விளம்பரத்திற்காக என்று பேசப்படுவதால் நான் வெளியே சொல்லாமல் செய்து வருகிறேன். நடிப்பதே என் குறிக்கோள் அதை நோக்கியே என் பயணம் என்று இப்போது போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரம் என்னால் முடிந்த உதவிகளை வெளியே தெரியாமல் செய்து கொண்டுதான் இருப்பேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button