கதையை உணர்ந்து, கதாப்பாத்திரமாகவே மாறிய உதயநிதி ! “கண்ணை நம்பாதே” விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மூ.மாறன் இயக்கத்தில் வி.என். ரஞ்சித் குமார் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் “கண்ணை நம்பாதே”. இந்தப் படத்தில் பிரசன்னா, ஶ்ரீ காந்த், சதீஷ், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைப்படி… தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் உதயநிதி உடனடியாக தான் தங்கியிருக்கும் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். இதனால் நண்பர் சதீஷுடன் வீடு தேடி அழைக்கின்றனர். பின்னர் தரகர் மூலமாக பிரசன்னா தங்கியிருக்கும் வீட்டில் வாடகையை பகிர்ந்து கொண்டு அவருடன் தங்குகிறார்.
அன்று இரவு பூமிகா ஓட்டி வந்த கார் சிறு விபத்துக்குள்ளாகிறது. அவருக்கு உதவ செல்கிறார் உதயநிதி. பின்னர் அவரது காரை இவரே ஓட்டிச் சென்று பூமிகா வை வீட்டில் இறக்கிவிடுகிறார். அந்த நேரத்தில் மழைபெய்ததால், காரை நீங்களே எடுத்துச் சென்று காலையில் கொண்டு வாருங்கள் என்கிறார் பூமிகா. பின்னர் நடந்த சம்பவங்களை தனது நண்பர்களான சதீஷ், பிரசன்னா இருவரிடமும் கூறிவிட்டு தூங்கச் செல்கிறார் உதயநிதி.
மறுநாள் காலையில் காரை பூமிகா வீட்டில் விடுவதற்காக காரை எடுக்கப்போகும் போது, காரின் டிக்கியில் பூமிகா பிணமாக கிடக்கிறார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உதயநிதி, பிரசன்னா விடம் கூற இருவரும் பதற்றமாகிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது ? பூமிகா மரணத்திற்கு யார் காரணம் ? அதன் பின்னனி என்ன ? இதில் உதயநிதி எப்படி சிக்கினார் ? என்பது மீதிக்கதை…
ஒரு கொலையை மறைப்பதற்காக உதயநிதியும், பிரசன்னாவும் எடுக்கும் முயற்சிகளை த்ரில்லர் பாணியில் கச்சிதமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் மூ.மாறன். பார்வையாளர்கள் சோர்வடையாதவாறு விடுவிப்பதற்காக கதையை நகர்தியிருக்கிறார் இயக்குனர்.
காதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் உதயநிதி. இவரது திரையுலக பயணத்தில் “கண்ணை நம்பாதே” படம் இவருக்கு மைல்கல் என்றே சொல்லலாம்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு, இசை மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.