பெப்சி யில் இணைக்கப்பட்ட சங்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதா..?
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என அழைக்கப்படும் பெப்சி யில் ( FEFSI ) 24 தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக இணைந்து சினிமா படப்பிடிப்பு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2016 ஆண்டிற்குப் பிறகு தற்போது பெப்சி யின் தலைவராக இருக்கும் இயக்குனர் செல்வமணி பெப்சிக்கு தலைவராக வந்தவுடன் டெக்னீசியன் யூனியனை பெப்சியிலிருந்து நீக்கினார்.
கொரோனா தொற்று பரவல் குறைந்து தற்போது தான் சினிமா படப்பிடிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரமின்றி கஷ்டப்பட்ட தொழிலாளர்கள் தற்போதுதான் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இந்நிலையில் சம்மேளனத்தில் இணைக்கப்பட்ட சங்கங்களின் எண்ணிக்கையை குறைக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரிடம் செல்வமணி பேசி முடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இணைக்கப்பட்ட சங்கங்களில் ஒப்பனை கலைஞர்கள் சங்கம்,உடை அலங்கார கலைஞர்கள் சங்கம், புகைப்பட கலைஞர்கள் சங்கம்,உணவு பரிமாறுவோர் , மகளீர் (பாத்திரம் சுத்தம் செய்வோர்) வாகன ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட ஆறு சங்கங்களை சம்மேளத்திலிருந்து நீக்குவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும்,பெப்சி தலைவரும் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்க தயாரிப்பாளர்கள் தரப்பில் யாரும் விரும்பவில்லை எனவும், தேவைப்பட்டால் தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கலாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பெப்சிக்கு செல்வமணி வந்ததிலிருந்து சோதனை மேல் சோதனையாக தயாரிப்பாளர்கள் சங்க முந்தைய நிர்வாகத்துடன் மோதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வேலையின்மை, தற்போது சங்கங்களின் எண்ணிக்கை குறைப்பு என சினிமா தொழிலாளர்களுக்கும், சினிமாவிற்கும் போதாத காலம். இவர் பெப்சி யில் தொடர்ந்தால் அனைத்து தொழிற்சங்கங்களையும் பெப்சி யிலிருந்து நீக்கம் செய்து தன்னை ஒரு சிறந்த தயாரிப்பாளர் என நிரூபித்துக்காட்டுவார் என தொழிலாளர்கள் தரப்பினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.