நடிகர் நிகில் நடித்துள்ள “ஸ்பை” திரைப்படம் மே-29 ஆம் தேதி வெளியாகிறது
நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘கார்த்திகேயா 2’ எனும் திரைப்படத்திற்கு பிறகு அப்படத்தின் நாயகனான நிகில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் தேசிய அளவிலான திரில்லர் படைப்பு ‘ஸ்பை’. இந்த படைப்பு 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த புலனாய்வு சார்ந்த படைப்பாக இருக்கும். நடிகர் நிகில் நடித்திருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ஸ்பை’ படத்தின் பின்னணியைப் பற்றி தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய காணொளியை வெளியிட்டிருந்தனர்.
இதில் இந்திய நாட்டின் சிறந்த ரகசியம் என்ன? என்பதையும், ‘நீ எனக்கு ரத்தம் கொடு நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன்’ என்ற முழக்கத்தை முதன்முதலாக முழங்கிய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பற்றியது என்பதையும் விவரித்தது. சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. அந்த மறைக்கப்பட்ட ரகசியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்பை திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கிறது. மேலும் இந்த ‘ஸ்பை’ திரைப்படம், உளவு தொடர்பான வழக்கமான படைப்பாக இல்லாமல் புதிதாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் மூலம் பிரபல பட தொகுப்பாளரான கேரி பி ஹெச் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் எனும் நிறுவனத்தை சேர்ந்த கே. ராஜசேகர் ரெட்டியும், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சரந்தேஜ் உப்பளபதியும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இந்த ‘ஸ்பை’ திரைப்படம் ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று வெளியாகிறது என்றும், இப்படத்தின் டீசர் மே பன்னிரண்டாம் தேதியன்று வெளியாகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், ஆக்சன் கலந்த ஸ்பை திரில்லராக உருவாகி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கான கதையை தயாரிப்பாளர் கே. ராஜசேகர் ரெட்டி எழுதியிருக்கிறார்.
இப்படத்தின் காட்சித் துணுக்குகள் மற்றும் ஏனைய போஸ்டர்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.