எளிய மக்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய “எறும்பு” படத்தின் பாடலாசிரியர்
கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ” எறும்பு ” திரைப்படத்தில் “ஒரு ஊருல எங்க வாழ்க்க” எனும் பாடல் தற்போது பலரது பாராட்டுகளை பெற்றுவருவதோடு, சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ” பிச்சைக்காரன் 2 ” படத்தில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதிதான் இப்பாடலையும் எழுதியுள்ளார். தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார். பிரதீப்குமாரின் குரல் இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.
இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதியிடம் பேசுகையில், பாடல் எழுதுவதற்கு இது போன்ற கதைக் களங்கள் அபூர்வமாகவே கிடைக்கிறது. இயக்குநர் சுரேஷ் இப்பாடலுக்கான காட்சிகளை முன்பே எடுத்து வந்துவிட்டார். பாடலுக்கான காட்சிகளை பார்த்தும், இசையமைப்பாளர் அருண்ராஜ் அமைத்த மெட்டுக்கும் தகுந்தவாறு எழுதியது தான் இந்த “ஒரு ஊருல” பாடல். பாடலை பார்க்கும் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து கேட்டதும் பிடிக்க கூடிய பாடலாகவும், சொந்த ஊருக்கு சென்று திரும்பி வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் கூறுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
மேலும் வெற்றிப்பாடல் என்பது வேறு. தரமான பாடல் என்பது வேறு. சில சமயங்களில் நாம் எழுதிய தரமான பாடல்கள் வெகுஜன மக்களை சென்றடைந்து வெற்றி பெறுவதோடு, மண் சார்ந்து, எளிய மக்களின் வாழ்வியலை பாடல் வரிகளில் சொல்வதே ஒரு படைப்பாளியாக நமக்கு மிகப்பெரிய திருப்தி ஏற்படும்.
அந்த திருப்தியை இந்தப் பாடல் எனக்கு கொடுத்திருக்கிறது என்ற கூறிய அருண்பாரதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக வளர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.