மாடல் அழகி கொலை வழக்கில், நீதிபதியின் பேரன் குற்றவாளியா ? “கொலை” திரைவிமர்சனம் !
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், பாலாஜி குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கொலை”.
கதைப்படி… அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரபல மாடல் அழகி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்வையிடும் போது, அங்கு வருகைதந்த உயரதிகாரி புதிதாக பணியில் சேர்ந்த ரித்திகா சிங்கிடம் அந்த வாழ்க்கை விசாரணை செய்யுமாறு உத்தரவிடுகிறார். மேலும் ஏற்கனவே பல வழக்குகளில் உண்மையை கண்டறிந்து அனுபவம் வாய்ந்த அதிகாரியான விநாயக் ( விஜய் ஆண்டனி ) யிடம் பேசி அவரது தலைமையில் விசாரணை மேற்கொண்டு வழக்கை முடிக்குமாறு உத்தரவிடுகிறார். விநாயக் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அவரது மகள் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சில மாதங்களாக காவல்துறை பணியிலிருந்து ஒதுங்கி இருந்த நிலையில், அவரிடம் பயிற்சி பெற்ற ரித்திகா சிங் கேட்டுக் கொண்டதற்காக வழக்கை விசாரணை செய்கிறார்.
முதலில் மாடல் அழகியின் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரப் பெண், அங்குள்ள காவலாளி, அங்கு வந்து சென்றவர்கள் என பல கோணங்களில் விசாரணை தொடர்கிறது. மேலும் கிதார் வாசிக்கும் நீதிபதியின் பேரன், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மூலை வளர்ச்சி இல்லாத பையன், மாடலிங் துறையில் பிரபல நிறுவனத்தின் மேலாளர் என அந்தப் பெண் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை தொடர்கிறது.
இறுதியாக மாடல் அழகி எதற்காக யார் கொலை செய்தார்கள் என்பதை விநாயக் கண்டுபிடித்தாரா ? இல்லை வழக்கம் போல் ஏதாவது காரணத்தைச் சொல்லி வழக்கை முடித்ததா காவல்துறை ? என்பது மீதிக்கதை...
இந்தப் படத்தில் புதுவிதமான தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டுள்ளார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும் அதை தெளிவாக உணரமுடிகிறது. மாடலிங் துறையை விரும்பும் பெண்கள், அந்த துறையில் ஜொலிப்பதற்காக அவர்கள் படும் இன்னல்கள், அறிவியல் வளர்ச்சியை குற்றவாளிகள் எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
க்ரைம், த்ரில்லர் கதை களத்தில் காட்சிகள் நகர்ந்தாலும், அடுத்து என்ன என பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், வேகத்தை அதிகரிக்கும் விதமாக திரைக்கதை அமைந்திருக்கலாம். இருந்தாலும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.