தெரியாமல் தவறு செய்து பெண்கள் சந்திக்கும் ஆபத்துக்கள் பற்றிய சமுகத்தின் பார்வைதான் “ஃபயர்”. ஜே.எஸ்.கே பெருமிதம்
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜே எஸ் கே இயக்குநராக தற்போது அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் எழுதி இயக்கும் திரைப்படத்திற்கு ‘ஃபயர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.
பெண்களின் விழிப்புணர்வு குறித்து பேசும் ‘ஃபயர்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த ஜே எஸ் கே, “இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும், அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும். தொடர்ந்து தவறான செயல்களில் தெரிந்தே ஈடுபடும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் சகஜமாக நடமாடும் நிலையில், பெண்கள் தெரியாமல் தவறு செய்தாலும் அவர்களை நமது சமூகம் வேறு மாதிரி பார்க்கிறது. இந்த சமூக பார்வை மாறினால் மட்டுமே நல்ல சமுதாயம் உருவாகும். ஏனென்றால் இவ்வாறு இருப்பது இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் நல்லதல்ல எனும் கருத்தையும் ரசிகர்களுக்கு இப்படம் கொண்டு செல்லும்,” என்று கூறினார்.
மேற்கண்ட விஷயங்களை சிறிதும் சுவாரஸ்யம் குறையாமலும், அதே சமயம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் ஃபயர் எடுத்துரைக்கும் என்றும், இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான திரைப்படமாக இது இருக்கும் என்றும் ஜே எஸ் கே மேலும் தெரிவித்தார்.
தனது ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ஃபயர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரான ஜே எஸ் கே, தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘குற்றம் கடிதல்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘மதயானைக் கூட்டம்’, ‘தரமணி’, ‘புரியாத புதிர்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘அண்டாவ காணோம்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஆவார்.