சினிமாவில் அடுத்த தலைமுறையின் ஆலமரம் தானு
அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
இயக்குனர் மதிமாறன் பேசும்போது, ‘விழாவிற்கு மிஷ்கின் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் என் குறும்படத்தை பார்த்து என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். நீ உதவி இயக்குனராக எவ்வளவு வேலை செய்கிறீயோ அது உன் படத்தில் பிரதிபலிப்பாக மாறும் என்றார். அவரிடம் எடுத்த பயிற்சிதான் செல்ஃபி திரைப்படம். தாணுவை பார்த்துதான் படம் எடுக்க வந்தோம். என் தயாரிப்பாளர் சபரிஷ், குணாநிதி இருவருக்கும் ரொம்ப நன்றி. இது லாபகரமான படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் சார் ஸ்டிடுயோவில்தான் எனக்கான நிறைய விசயங்கள் நடந்தது. ஜி.வி.பிரகாஷுக்கு ரொம்ப நன்றி. படப்பிடிப்பு தளத்தில் அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எடிட்டர் இளையராஜா உள்பட படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுப்பிரமணிய சிவாவுக்கும் நன்றி. இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.
ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, மிஷ்கின், கல்யாணம் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் நன்றி. வெற்றிக்கு நன்றி சொன்னால் அதற்குள் மதிமாறனும் அடங்குவார். என் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்திக்கும் போது, இவரோடு படம் பண்ணுவேன் என்று நினைக்க வில்லை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கோம். நான் நடித்த படங்களைப் பார்க்கும் போது தவறுகளைத்தான் பார்ப்பேன். இந்தப்படம் ரொம்ப நல்லா வந்துருக்கிறது. தாணு சார் இந்தப்படத்திற்குள் வந்தபிறகு வணிக ரீதியான வெற்றிக்குள் வந்துவிட்டது’ என்றார்.
மிஷ்கின் பேசும்போது, ‘ரொம்ப அழகான மாலை இது. என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குனர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன்.
மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன் தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.
தாணு எனக்கு முதல் படம் முடிந்ததும் 50000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதுவரை பணத்தை திருப்பி கேட்கவில்லை. முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு செயல்படுகிறார். ஜிவி பிரகாஷ் கூட நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும். சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என்றார்