“பர்த் மார்க்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !
ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’. இந்தப் படம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியதாவது, குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்து வந்த விஷயம் என்பதால்தான். இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு விஷயமும் ‘பர்த் மார்க்’ போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும். மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண்மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம் இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம் என்றார்.
நடிகர் ஷபீர் பேசுகையில், ‘சார்பட்டா’ படத்திற்குப் பிறகு நான் முதலில் கையெழுத்துப் போட்ட படம் இது. இதன் பிறகுதான், ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்தேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இயக்குநர் கொடுத்த இன்புட் வைத்தே படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன் படத்தில் லிப்லாக் வைக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. கதைக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டது என்றார்.
மேடையில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன், ஷபீருடன் நடிகர்கள் தீப்தி, பொற்கொடி, ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், எடிட்டர் இனியவன் பாண்டியன் எனப் படக்குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.