“மல்லர் கம்ப கலை”யில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத் திறனாளி குழுவினர் !

தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர் பேசுகையில்.. நீங்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களை கடவுள் மாற்றுத்திறனாளிகளாக படைத்தாலும், அம்மா அப்பா ஏழ்மையாக இருந்தாலும், ராகவா லாரன்ஸ் மாஸ்டர் எங்களுக்கு என ஒரு அறக்கட்டளை உருவாக்கி, எங்களுக்கு பயிற்சி தந்து வாய்ப்புகள் வாங்கித் தந்து, எங்களுக்கு கடவுளாக இருக்கிறார். நடனம் மட்டுமல்லாமல் இப்போது எங்களுக்கு மல்லர் கம்பம் பயிற்சி தர, இப்போது எங்கள் குழுவிற்கு பல வாய்ப்புகள் தொடர்ந்து வர ஆரம்பித்துள்ளது. நீங்களும் உங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ராகவா லாரன்ஸ் பேசியதாவது.. எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன். சினிமாவில் சில நேரம் ஒரே மாதிரி இருக்கிறதே இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்  என்பார்கள், நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும் என்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் ‘மல்லர் கம்பம்’ என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக் கொள்கிறோம்  என்றார்கள். இது நல்ல வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது உங்களால் முடியுமா ? எனக் கேட்டேன், ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக் கொண்டார்கள்,

இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்களால் எல்லாமே முடியும். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய காரணமே, இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன். இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்தக்கலை இவர்களை வாழ வைக்கும்.

இந்தக்கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் நாளை என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும் இக்கலையை கற்றுத்ந்த ஆதித்யன் மற்றும் குழுவினரை பாராட்டினார் ராகவா லாரன்ஸ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button