தேவர் மகன் படத்துக்கு வயது 32
தமிழ்நாட்டில் எந்த கிராமத்துக்கும் போனாலும் அங்கே ஒரு கோவில் பூட்டிக்கிடக்கலாம். அங்கே ஒரு திருவிழா நின்று போயிருக்கலாம். அங்கே ஒரு தேர் ஓடாமல் இருக்கலாம். அங்கே ஒரு சாமி ஒரு தெருவுக்குள் நுழையாமல் அடம் பிடிக்கலாம்.
இதனாலே கிராமத்து திருவிழாக்கள் இப்போதெல்லாம் சில கிராமங்களில் கொண்டாடப்படுவதில்லை. கிராமத்தில் பஞ்சாயத்துக்கள் கூட்டப்படுவதில்லை.
மனிதர்களுக்குள் உள்ள ஈகோவும், ஆணவமும் தான் இதை தடுத்து நிறுத்தி இருக்கின்றன. அதை சரியாக பிரதிபலித்த படம் தான் தேவர் மகன்.
இந்த மோதல்களை தேவர் மகன் என்கிற சினிமா ‘பங்காளி மோதலா’க எடுத்துக் கொள்ளக்காரணம் கூட, அதே மனிதர்களுக்கான ஈகோ தான். உள்ளதை உள்ளபடி சொன்னால் கலை தன் கிரீடத்தை அணிய முடியாது.
தேவர் மகன் என்கிற சினிமா இந்த மனித உணர்வுகளை பிரதிபலிக்கிறது. சக்தி என்கிற நாயகன் நேர்மையாளன். சிறுவயது முதல் கிராமத்து சிலம்பம் கூட கற்று கிராமத்தானாக வாழ்ந்தவன். பட்டணத்துக்கு படிக்கப்போனால் அங்கே உள்ள கலாச்சாரத்துக்கும் ஒத்து ஊதுகிறான். ஃபங்க் முடி வளர்த்து, தாடி ட்ரிம் செய்து, கேர்ள் ஃப்ரெண்ட்டெல்லாம் வைத்து அவளை தனியாளாக ஊருக்கே கூட்டி வருகிறான். சக்தி கேரக்டராக ஒரு சூழ்நிலைக் கைதி. சூழ்நிலைக்கு முடிவெடுப்பான். கிராமத்தில் வளரும் போது சிலம்பம். பட்டணத்துக்கு படிக்கப்போனால் காதலி. அப்பா இறந்ததும் நாட்டாமை. பஞ்ச வர்ணம் நீதி கேட்டதும் தன் வாழ்க்கையையே கொடுத்தல். பங்காளி மாயனோடு மோதலில் அவனை அறியாமல் மாயனை கொன்று விடுகிறான். இதில் “புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்கடா”ன்னு அறிவுரை வேறு. எடேய் சக்தி நீ கூட படிச்சவன் தான்டா. படிச்சிட்டு என்னா செஞ்ச?… என மாயனின் மனசாட்சி சக்தியிடம் கேட்காமல் இருக்காது.
தேவர் மகன் என்கிற படத்தை உருவாக்கும் போது அது ஒரு க்ளாசிக்காக அமையும் என கமலுக்கே தெரியாது. கங்கைஅமரனோடு ‘அதிவீரபாண்டியன்’ பட டிஸ்கஷனில் கிடைத்த சிலம்பாட்ட காட்சிகள், கலைஞானத்திடமிருந்து கிடைத்த கோவில் பூட்டப்பட்டு திறந்ததால் நேரும் பிரச்சினைகள், இவற்றோடு நிஷீபீ யீணீtலீமீக்ஷீ படத்திலிருந்து பெறப்பட்ட காட்சிகளையும் இணைத்து அழகான திரைக்கதை எழுதியாயிற்று. ஆனால் அந்தத் திரைக்கதை ஒரு பாடமாக வைக்கும் அளவுக்கு மாறும் என யாருமே நினைக்கவில்லை.
கமல் ரேவதியை மணந்து கொண்டு கௌதமியைப் பிரியும் போது நீண்ட முத்தம் தந்து விட்டுப்பிரிவார். அது கௌதமியின் காதலின் ஆழம். ஆனால் கமல் கௌதமியை பிரியும் போது அதே காதலின் ஆழம் கமலிடம் இருப்பதில்லை. ரேவதியை கட்டும் போதும் தோன்றவில்லை. உடனே தாலி கட்டி விடுவார். இதைத்தான் சூழ்நிலை கைதி இந்த சக்தி என நினைக்கத் தோன்றுகிறது.
சிவாஜி ஒரு தேவராக வாழ புதிதாக நடிக்க வேண்டியதில்லை. தன் தம்பி மகனை வெளிநாட்டில் படிக்க வைத்த சிவாஜி தன் மகன்களை கூடவே வைத்துக்கொண்டவர். அவர் பெரிய தேவராக வந்தாலும் விழுப்புரம் சின்னையா கணேசன் தான். அதனாலேயே அவர் நடிக்கவேண்டிய அவசியமில்லை. இன்று அவர் வீட்டிலும் தேவர் மகன் போன்றே சொத்து தகராறு நடக்கிறது துரதிர்ஷ்டம்.
கமல் தன் பாத்திரங்களுக்கு எப்போதும் நியாயம் செய்பவர். தேவர் மகன் சக்தி கேரக்டருக்கு அவர் செய்த நியாயம் அழகானது. கௌதமியின் பாத்திர வடிவமைப்பும், ரேவதியின் பாத்திர வடிவமைப்பும் இரு வேறு துருவங்கள். ஆனால் கமல் நடிப்பில் இருவரோடும் வேறு வேறு பரிமாணங்களைக்காட்டுவார்.
தாடி வைத்த இளைஞனாக உணர்ச்சி வசப்பட்டு பொங்கும் சக்தி ஊர்ப்பெரியவர் சக்திவேலு அய்யாவானதும் காட்டும் நிதானம், தீர்க்கமான முடிவுகள் என பாத்திர வேறுபாடுகளை நடிப்பில் காட்டி இருப்பார். இந்தப்படம் ஹிந்தியில் வந்த போது அனில் கபூருக்கு இந்த வேறுபாடைக்காட்ட முடியாமல் திணறி இருப்பதைக்காணலாம்.
தேவர் மகன் படத்தில் மட்டுமல்ல ஈகோ. படத்திற்கு வெளியேயும் கமலுக்கும், மற்ற கிரியேட்டர்களுக்குமிடையேயான சிறந்த படைப்புக்கான ஈகோவும் இருந்தது. அந்த ஈகோதான் தேவர் மகனை க்ளாசிக்காக்கியது. உண்மையான தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குக்கூட இப்படி களமாட முடியவில்லை.
தேவர் மகன் பற்றி பல கதைகள் கதைக்காக சொல்லப்பட்டாலும் மொத்தமாக சிறந்த அவுட்புட் படம். இயக்குனர் பரதனை பாராட்டியே ஆக வேண்டும். அவரின் ஒவ்வொரு காட்சிப்படுத்தலும் நமக்கு நம் சிறுவயது கிராமத்தின் நினைவுப்படுத்தலாக அமைந்தது அவரின் வெற்றியே…
மீண்டும் எடுக்க முடியாத படம்…..
1992 ஆம் ஆண்டு தீபாவளி அன்று தேவர் மகன் வெளியானது.