காமதேனு தியேட்டர் இடிக்கப்பட்டது தமிழ்சினிமாவுக்கு இழப்பா?
தமிழ்நாட்டில் பாரம்பர்யமான திரையரங்குகள் காலமாற்றத்தின் காரணமாக இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக மாற்றம் கண்டு விட்டது. கோடிக்கணக்கான முதலீட்டை விழுங்கி நிற்கும் திரையரங்குகள் மூலம் முதலீட்டிற்கு ஏற்ப வருவாய் கிடைப்பதில்லை.
மேலும் நிரந்தரமான வருவாய் திரையரங்க தொழில் மூலம் கிடைப்பதற்கு உத்திரவாதம் இல்லை. அதனாலேயே பாரம்பர்யமான தியேட்டராக இருந்தாலும் அவை மூடப்படுவதுடன் வணிக ரீதியாக வேறு தொழிலுக்கு மாறுகின்றன. அந்த வகையில் சென்னையில் 70 ஆண்டுகளை கடந்த பழமையான காமதேனு திரையரங்கம் இடிக்கப்பட்டுள்ளது.
16ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் என்ற மாளிகையாக இருந்தது காமதேனு தியேட்டர். 1950களில் அந்த மாளிகைதான் காமதேனு தியேட்டராக மாறி செயல்படத் தொடங்கியது. முதலில் பழைய படங்களை வெளியிடும் ஷிப்டிங் தியேட்டராக இருந்து பின்னர் புதிய படங்களை வெளியிடும் தியேட்டராக மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு அதிகம் பிடித்த தியேட்டராக மாறியது. அந்தக் காலத்தில் மவுண்ட் ரோடு பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்குத்தான் மக்கள் சென்று படம் பார்க்கும் வசதி இருந்ததாம். அதை மயிலாப்பூர் பகுதிக்கும் கொண்டு வந்து சேர்த்த பெருமை காமதேனு தியேட்டருக்கு உண்டு. அப்போது 6 அணா, 10 அணா, 15 அணா என டிக்கெட் கட்டணங்கள் இருந்துள்ளது. மவுண்ட் ரோட்டில் புதிய படங்கள் ஓடி முடிந்த பின் அந்தப் படங்கள் காமதேனு தியேட்டரில் திரையிடப்படுமாம். பைசா அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 50 பைசா, 1 ரூபாய், 1 ரூபாய் 60 காசுகள், 2 ரூபாய் என அப்போது டிக்கெட் கட்டணங்கள் இருந்திருக்கின்றன. எம்ஜிஆர், சிவாஜி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த போது காமதேனு தியேட்டரும் முக்கியமான தியேட்டராக இருந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தத் தியேட்டர் செயல்பட்டு வந்த போது, ரீ-ரிலீஸ் படங்கள்தான் அதிகமாகத் திரையிடப்பட்டு வந்தன. காலப்போக்கில் பல தியேட்டர்கள் மூடப்பட்ட சூழ்நிலை காமதேனு தியேட்டருக்கும் வந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு தியேட்டர் மூடப்பட்டு, திருமண மண்டபமாக செயல்பட்டு வந்தது. இது போன்ற தியேட்டர்கள் மூடப்பட்டு, இடிக்கப்பட்டு வருவது தமிழ் சினிமாவிற்கு இழப்பா என கேட்டால், இல்லை என்றே வருகிறது பதில். இங்கு மூடப்படும் தியேட்டர்களை காட்டிலும் அதிமான திரையரங்குகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன என்கின்றனர்.