‘கங்குவா’ தமிழ்சினிமாவிற்கு கௌரவம் சேர்க்குமா?
இந்திய சினிமாவில் ஆகசிறந்த, ஆளுமை மிக்க நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. தங்களது இமேஜை வளர்த்துக் கொள்ள திரைக்கதை எழுத சொல்லும் தமிழ் சினிமாவில், இயக்குநர்களின் திரைக்கதைக்குள் தன்னை அர்பணிக்கும் திரைக்கலைஞன் சூர்யா. இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின் சூர்யா நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களில் திரையரங்குகளில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.
பாகுபலி, கேஜிஎப் ஸ்டைலில் பேண்டசி த்ரில்லராக சூர்யா நடிப்பில் தயாராகி உள்ளது கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் கங்குவா படத்தில் சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது.
சூர்யா பிரான்சிஸ், கங்குவா என இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார். இரண்டு வேடங்களிலும் அவர் நடிப்பில், தமிழ் உச்சரிப்பில் என எல்லாவற்றிலும் வித்தியாசங்கள் காட்டி இருக்கிறார் என கூறப்படுகிறது. நிகழ்காலத்தில் தொடங்கி, பிளாஷ்பேக்கிற்குள் கதை செல்லும். பிரான்சிஸ் கதாபாத்திரம் நிகழ்காலத்தில் வாழும் ஒரு இளைஞனை பற்றியது, பிரான்சிஸ் கலகலப்பும் துறுதுறுப்புமாக ஜாலியாக இருப்பார். அந்த போர்ஷனில்தான் திஷா பதானி அவரது காதலியாக வருகிறார். பிரான்சிஸ் போர்ஷன் முழுவதும் படமாக்கிய பின்னர்தான் 1500 ஆண்டுக்கு முந்தைய வரலாற்று காலத்தை முன்னிறுத்தும் ‘கங்குவா’ போர்ஷன் படமாக்கப்பட்டுள்ளது.
‘கங்கு’ என்றால் நெருப்பு. நெருப்பு பற்றிக்கொண்டால், எப்படி வேண்டுமானாலும் பரவும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் பரவும். அப்படி கட்டுக்கடங்காதவரே கங்குவா. இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை இது. 2024ல் நடக்கும் கதை ஒரு பகுதி. இன்னொரு பகுதி, 1, 500 வருஷங்களுக்கு முன்னர், அதாவது எந்தக் காலத்தில் நடந்தது என்று சொல்ல முடியாத காலகட்டத்தில் நிகழும். ‘ஏழாம் அறிவு’ படத்திற்காக சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருந்தார். தற்போது ‘கங்குவா’விற்காக மறுபடியும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.
பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில்வெளியாக உள்ள இப்படம் ‘சரித்திர சயின்ஸ் பிக்ஷன்’ படமாக உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை ஒரு படம் கடப்பது சாதனை அளவாகவும், கௌரவமாகவும் கருதப்பட்டு வந்தது. தற்போது 500 கோடி ரூபாய், 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடிப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது இந்திய சினிமாவில். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் அதிகம் இருப்பது தமிழ் சினிமாவில்தான். ஆனால் அதற்குரிய வசூலும், லாபமும் தயாரிப்பாளர்களுக்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது.
எந்த ஒரு தமிழ்ப் படமும் இதுவரையில் 1000 கோடி வசூலைக் கடந்ததில்லை. அதிகபட்சமாக ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்பார்கள். இந்த வருடம் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான், விஜய் நடிப்பில் வெளியான கோட், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் ஆகிய படங்கள் 1000 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்யும் என பட வெளியீட்டுக்கு முன்பாக கூறப்பட்டது. ஆனால் 500 கோடி ரூபாய் மொத்த வசூலை கடப்பதற்கே கோட், வேட்டையன் படங்கள் போராடி தோற்றுப் போனது. தங்கலான் எதிர்மறை விமர்சனங்களால் திரையரங்குகளில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் சர்வதேச தரத்தில், குறிப்பிட்ட கலாச்சாரம், மண் சார்ந்த கதையாக இல்லாமல் தயாரிக்கப்பட்டிருக்கும் கங்குவா தமிழ் சினிமாவின் கனவான 1000 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டுமா என்கிற ஆவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை வெளியான படங்களில் ஆமீர்கான் நடித்த ‘டங்கல்’ படம் மட்டுமே மொத்தமாக 1900 கோடியை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதற்கடுத்து ‘பாகுபலி 2’ படம் 1800 கோடியும், ‘ஆர்ஆர்ஆர்’ படம் 1300 கோடியும், ‘கேஜிஎப் 2’ படம் 1200 கோடியும், ‘ஜவான், பதான்’ ஆகிய படங்கள் 1100 கோடியும், ‘கல்கி 2898 ஏடி’ படம் 1100 கோடியும் வசூலித்தாக கூறப்படுகிறது. மண்ணின் மைந்தன் ஆக சிறந்த நடிப்பு கலைஞன் சூர்யா, நடிப்பில் நவம்பர் 14 அன்று வெளியாகும் கங்குவா தமிழ் சினிமா கனவை நிஜமாக்கட்டும்.