“தென் சென்னை” படத்தின் திரைவிமர்சனம்

ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா, நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் தென்சென்னை. இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதைப்படி.. சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் தேவராஜன் தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமையால் ஒரு ஹோட்டலை உருவக்குகிறார். மதுரையில் சந்திக்கும் அண்ணன், தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார். அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன் தான் நாயகன் ரங்கா. தாத்தாவிற்கு பிறகு அந்த ஹோட்டலைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாயகனுக்கு வருகிறது.

இன்னொரு பக்கம் வில்லன் பாரில் வைத்து பல தில்லுமுள்ளுகளை செய்கிறார். பண மோசடியில் ஈடுபடும் வில்லனின் கையில் ஹோட்டல் போகும் நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் ஒரு குழந்தையை நாயகன் ரோட்டில் கண்டெடுக்கிறார். அந்த குழந்தை மூலம் நாயகியை சந்திக்கிறார். அது யாருடைய குழந்தை ? ஹோட்டல் தொழில் என்ன ஆனது ? இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

முதலில் தென் சென்னையில் நடக்கும் கதை பெரும் ஆசுவாசம் தருகிறது. நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்வியலுக்குள் ஒரு பரபரப்பான த்ரில்லர் அனுபவத்தை முதல் படத்திலேயே தந்து அசத்தியிருக்கிறார்.  நாயகனாக நடிப்பில் முதல் படம் என்ற தயக்கங்கள் எதுவும் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.

மருத்துவராக நாயகி ரியா அழகான, நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். முன்னாள் ராணுவ அதிகாரி இந்நாள் செக்யூரிட்டி ஏஜன்ஸி நடத்தும் நிதின் மேத்தா தோற்றத்திலேயே பாதி ஜெயித்து விடுகிறார். தன் தேர்ந்த நடிப்பின் மூலம் வில்லன் பாத்திரத்தை வெகு சிறப்பாக செய்துள்ளார். இளங்கோ குமரனுக்கு சின்ன வேடம் தான், வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன் எல்லோரும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

சண்டைக்காட்சிகள் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை பார்க்கும் உணர்வைத் தருகிறது.
படத்திற்கு மிகப்பெரும் பலமாக பின்னணி இசை அமைந்துள்ளது, ‘டாடா: பிளடி பெக்கர் படங்களுக்கு இசையமைத்த ஜென் மார்டின் பின்னணி இசை அமைத்துள்ளார். சிவ பத்மயன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் சரத்குமார் காட்சிகளை பட்ஜெட்டைத் தாண்டி சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் பட்ஜெட் சின்னதாக இருந்தாலும், படக்குழு அனைவரும் முழு உழைப்பைத் தந்திருப்பது தெரிகிறது.

புது நடிகர்கள், புது கலைஞர்கள் வைத்துக்கொண்டு, கதை, அதை நகர்த்திய விதம் என எல்லாவற்றிலும் அறிமுக இயக்கத்தை தாண்டி ஜெயித்திருக்கிறார் ரங்கா. திரைக்கதை மட்டும் இன்னும் மெருகேற்றியிருந்தால் சிறப்பான படைப்பாக ஈர்த்திருக்கும். ஆனாலும் தென் சென்னை படத்தை கண்டிப்பாக ஒரு தடவை பார்த்து ரசிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button