“லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் ஜெகன் பேசியதாவது.., இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள். படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது. விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

நடிகை கௌரி பேசியதாவது..,
ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் “கல்கி” இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது. சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்றார்.

நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது.., இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது.., விக்னேஷ் சிவன் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம். எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால், நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும், ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான். நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது.., எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதனுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.

சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5-6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது.., இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது. அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது. கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.

பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது. இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும் ? என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள் என்றார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது., இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.

இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம், காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான்  விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.

இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும், நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button