கேன்ஸ் பட விழாவில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் “பாலன் த பாய்” திரையிடல் !

இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-ல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.

அடையாளம், உயிர் வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய் இடையிலான பிணைப்பு ஆகியவற்றை மையமாக கொண்ட உலகளாவிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் சிதம்பரம் பேசும் போது நாம் அறியாமலேயே சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் நாம் சேர வேண்டிய இடத்தை நோக்கிய தேடல் தான் இப்படம். உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவர்களுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மையான சினிமாவை மதிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

KVN புரொடக்ஷன்ஸ் வெங்கட் கே. நாராயணா கூறும் போது, மலையாள சினிமா இன்று உலகம் கவனிக்கக் கூடிய படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘பாலன் த பாய்’ இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

தெஸ்பியன் ஃபிலிம்ஸ், திருமதி. சைலஜா தேசாய் ஃபென், கூறும் போது, “2022-ல் கேன்ஸ் விழாவுக்கு வந்தபோது, அடுத்த முறை ஒரு சிறந்த படத்துடன் வரவேண்டும் என எனக்குள் உறுதி எடுத்தேன். இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது பெருமையாக உள்ளது. இந்தப் படம் வயது எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கவரும் என்று தெரிவித்தார்.

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஜித்து மாதவன் எழுத, சிதம்பரம் இயக்கியுள்ளார். சர்வதேச திரைப்பட வல்லுநர்கள் மத்தியில் நடைபெறவுள்ள இந்தத் திரையிடல், ‘பாலன் த பாய்’ திரைப்படத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button