குறும்பட இயக்குனர்களை உற்சாகப்படுத்திய ஆர். கே. செல்வமணி !

டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற நிகழ்வில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு முதல் மூன்று பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. குறும்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பிரிவில் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பாண்டிராஜ், கணேஷன், நடிகைகள் அஸ்மிதா, ஷியமளா, ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சியில் துஷாந் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான கணேஷன் பேசுகையில், “நான் திரைப்படத்துறையில் 35 ஆண்டுகளாக இருக்கிறேன். ‘தர்பார்’ வெற்றி விழாவில் பாராட்டு தெரிவிப்பதற்காக என்னை அழைத்த போது, அந்த நிகழ்ச்சியில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதாவது, 100 கோடி, 200 கோடி என்று பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நீங்கள் 3 கோடி, 5 கோடியிலும் படம் தயாரிக்க வேண்டும், அப்படி தயாரித்தால் திறமை மிக்க இளைஞர்கள் மற்றும் புதிய சிந்தனை உள்ளவர்கள் சினிமாவுக்கு வருவார்கள், சினிமாத்துறையும் வளர்ச்சி அடையும் என்றேன். ஆனால், அவர்கள் அதை கேட்காமல், தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் தான் படம் தயாரித்தார்கள். அதேபோல், ஈழத்தில் இருந்து பணத்துடன் வருபவர்களை இங்கே சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு சில இயக்குநர்கள் பணத்துடன் வரும் ஈழத் தமிழர்களை ஏமாற்றி, அவர்களை ஓட வைத்து விடுவார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில், துஷாந் சிறு சிறு அடியாக எடுத்து வைத்து வருகிறார். படம் தயாரிப்பதோடு இல்லாமல் இப்படி ஒரு பிரமாண்டமான குறும்பட போட்டி நடத்தி விருது வழங்கும் விழாவை நடத்தி அனைவரையும் வியக்க வைத்து விட்டார். அவர் இந்த குறும்பட போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டும், பல படங்களை தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் முருகானந்தம் பேசுகையில், துஷாந் அவரது பிறந்தநாளில் இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்தி பலரின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். இதுபோல் அவரது பிறந்தநாளில் நல்ல விசயங்களை செய்வார் என்றால், ஆண்டுக்கு நான்கு பிறந்தநாள் கூட அவர் கொண்டாடலாம் தவறில்லை. நான் உதவி இயக்குநராக சேருவதற்கு மிகவும் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன். அப்போது எங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான தளங்கள் இல்லை, மேடை கிடைக்காது. ஆனால், இங்கிருப்பவர்களுக்கு இந்த குறும்பட போட்டி மூலம் சிறப்பான மேடை கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி நீங்கள் அனைவரும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் திலீபன் பேசுகையில், துஷாந் இலங்கையில் பிறந்து, லண்டனில் பணியாற்றி இப்போது தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கிறார். சமீபத்தில் டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். பின்னர் ஒரு மிகப்பெரிய குறும்பட போட்டியை நடத்தியிருக்கிறார். இந்த போட்டி பலருக்கு மிகப்பெரிய வாழ்க்கையை தரப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

எங்களது காலக்கட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் தான் கேமராவையே பார்க்க முடியும், மற்றபடி இப்போது இருப்பது போல் சிறிய அளவிலான கேமராவை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்த முடியாது. ஆனால், இப்போது உள்ள தலைமுறையினருக்கு இதுபோன்ற குறும்பட போட்டிகள் அவர்களது திறனை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமைந்திருக்கிறது. எனவே இதை சரியாக பயன்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். இதுபோன்ற போட்டியில் பரிசு பெறுவது வெற்றி அல்ல, பங்கேற்பதே மிகப்பெரிய வெற்றி தான். எனவே, இதில் பங்கேற்ற அனைவரும் நல்ல திரைப்படங்கள் இயக்கி இயக்குநராக வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநரும் நடிகருமான பேரரசு பேசுகையில், இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்தி பலருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் துஷாந்துக்கு என் பாராட்டுகளும், நன்றியும். எங்கள் காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேரம் வாங்குவதே பெரிய விசயமாக இருக்கும். இங்கு பேசியவர்கள் உதவி இயக்குநராக இருக்கும் போது எதிர்கொள்ளும் கஷ்ட்டங்களை சொன்னார்கள், நான் சொன்னால் அதற்கே பத்து நாட்கள் ஆகும். கஷ்ட்டங்களை தாண்டி நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும். கதை சொல்ல நேரம் தர மாட்டார்கள், அப்படியே தந்தாலும் மதிக்க மாட்டார்கள், நிற்க வைத்து கதை கேட்பார்கள். நான் அப்படி பல சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை, துஷாந் ஏற்படுத்திய இந்த மேடை மூலம் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல இயக்குநராகவோ, உதவி இயக்குநராகவோ பயணிக்க போகிறீர்கள். எனவே துஷாந்தின் இந்த முயற்சி வரவேற்க வேண்டியது, இது தொடர்ந்து நடக்க வேண்டும்.

புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கும் போது எதுவும் தெரியாமல் வருகிறார்கள், படம் முடியும் போது தான் சினிமா பற்றி தெரிந்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் நஷ்ட்டம் அடைவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி அவதிப்படுகிறார்கள். துஷாந் அப்படி இல்லாமல் மிக தெளிவான முறையில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார், அவர் மூலம் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த குறும்பட மேடையில் இருப்பவர்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நிச்சயம் இவர்கள் எதிர்காலத்தில் நல்ல இயக்குநர்களாக வருவார்கள், வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா பேசுகையில், இந்த குறும்பட போட்டி பலரது கனவை நிறைவேற்றப் போகிறது. இந்த நிகழ்ச்சியை துஷாந் ஒவ்வொரு ஆண்டும் செய்து, அவரது பிறந்தநாளை குறும்பட தினமாகவே கொண்டாட வேண்டும், அப்படி செய்தால் நல்லது தான், பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். வைரமுத்து ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “கண்ணே கொஞ்ச மறைமுகம் தேவை, கப்பல் ஒதுங்க துறைமுகம் தேவை, வாழ்க்கையில் முன்னேற நல்ல மனிதர்களின் அறிமுகம் தேவை” என்று சொன்னார். அதுபோல், உங்களுக்கு துஷாந் என்ற நல்ல மனிதரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவரும் நல்ல நிலைக்கு செல்ல உள்ளீர்கள். சினிமா என்பது சாதாரண விசயம் இல்லை, கலையின் உச்சம். இப்படிப்பட்ட சினிமாவில் பயணிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் உங்களது வாய்ப்புகளை பயன்படுத்தி, சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை சொல்லும் படங்கள் எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், இதுபோன்ற குறும்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டுவேன். காரணம், இதுபோன்ற ஒரு குறும்படம் மூலம் தான் நானே இயக்குநராக உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது ராவுத்தர், விஜயகாந்த் எல்லாம் பழக்கம். திரைப்படக் கல்லூரியில் படித்து முத்த உடனேயே கதை சொல்ல முயற்சித்தேன் . அப்போது ராவுத்தர் சாரை பார்த்து விஜயகாந்த் சாரிடம் கதை சொல்ல நேரம் கேட்கும் போது, அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என்பார். பிறகு மறுபடியும் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்றால், அப்போது தம்பி அண்ணன் தேதி இல்லை, பிஸியாக இருக்கிறார் இரண்டு ஆண்டுகள் போகட்டும் என்பார். இப்படியே பல வருடங்கள் போய் விட்டது. இன்னும் 20 வருடங்கள் ஆனாலும் ராவுத்தர் இதை தான் சொல்வார், என்பது தெரிந்து விட்டது. உடனே நான் ஒரு குறும்படம் இயக்கிவிட்டு, அவரை சந்திக்க சென்றேன். அப்போதும், தம்பி தேதி இல்லை, என்று சொன்னார். தேதி கேட்பதற்காக வரவில்லை, குறும்படம் ஒன்று இயக்கியிருக்கிறேன், அதை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவரும் சரி என்று அந்த குறும்படத்தை பார்த்தார். பார்த்துவிட்டு மறுநாளே தம்பி அண்ணனை வைத்து ஒரு படம் பண்ணலாம், இப்பவே தொடங்கிடு என்று சொல்லி பூஜை போட்டு விட்டார். இரண்டு வருடங்களுக்கு தேதி இல்லை என்று சொன்னவர், என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு இரண்டு வாரங்களிலேயே படத்தை தொடங்க சொல்லி விட்டார். அந்த அளவுக்கு ஒரு குறும்படம் எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது. அதனால் தான் இதுபோன்ற நிகழ்வுகளில் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.

குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை. முழுநீள படங்கள் எடுக்கும் போது எதாவது ஒரு காட்சியை சுவாரஸ்யமாக சொன்னால் போதும். ஆனால், குறும்படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யம் இருக்க வேண்டும். விளம்பர படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு பிரேமிலும் கதை சொல்ல வேண்டும். எனவே இதுபோன்ற குறும்படங்களை சிறப்பாக எடுப்பவர்கள் நிச்சயம் நல்ல திரைப்படங்களை எடுப்பார்கள். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், நான் பல குறும்பட போட்டிகளில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறேன், அப்போது அங்கு பார்த்த படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தும். சில நிமிடங்களில் ஒரு முழுநீள படத்திற்கான கதையை சிறப்பாக சொல்வார்கள். நீங்களும் அப்படி தான் உங்களது குறும்படங்களை சிறப்பாக இயக்கியிருக்கிறீர்கள், உங்களுக்கு என் வாழ்த்துகள். இங்கு வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. இங்கு ஒரு நடுவருக்கு பிடிக்காத குறும்படம், மற்றொரு போட்டியில் உள்ள நடுவருக்கு பிடிக்கும். இது அவர்களது தனிப்பட்ட தேர்வு தான். எனவே வெற்றி, தோல்வி பற்றி யோசிக்க கூடாது, இந்த போட்டியில் பங்கேற்றதே பெரிய வெற்றியாக பார்க்க வேண்டும். நிச்சயம் உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது, வாழ்த்துகள் என்றார்.

இசையமைப்பாளர் தினா பேசுகையில், நானும் இதுபோன்ற குறும்படங்கள் மூலமாகத்தான் சினிமா வாய்ப்பு பெற்றேன். ராதிகா, விக்ரம் நடித்த டெலிபிலிம் ஒன்றுக்கு முதன் முதலில் இசையமைத்தேன். அதன் பிறகு சித்தி சீரியலில் டைட்டில் பாடல் போட்டேன். அதன் பிறகு தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. எனவே நானும் உங்களைப் போல் டெலிபிலிம், சீரியல் ஆகியவற்றில் பயணித்த பிறகே சினிமா வாய்ப்பு பெற்றதால், நிச்சயம் இந்த குறும்படங்கள் சினிமாவில் உங்களுக்கான இடத்தை பெற்றுக் கொடுக்கும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் பேசுகையில், இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல நல்ல திட்டங்கள் அறிமுகமாகும், அதற்காக நாங்கள் தினமும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், என பல புதியவர்கள் அறிமுகமாக வேண்டும். அதற்கான ஒரு வழிகாட்டுதலாக இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்திய துஷாந்துக்கு வாழ்த்துகள். இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும், என்று கூறி வாழ்த்துகிறேன் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button