“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இயக்குநர் ராஜா பத்மநாபன் பேசுகையில், வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது என்றார்.

இயக்குநர் சரண் பேசுகையில், சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய ‘அமர்க்களம்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ் வைப் இருக்கிறது. இந்த ஒரு பாடலை வைத்து மட்டுமே நீங்கள் அதை ஒரு படமாக எடுக்கலாம். சரிகம சாதாரணமாக ஒரு பாடலை தேர்வு செய்து தங்கள் தளத்தில் வெளியிடாது. பல செக் லிஸ்ட் அதற்கு உண்டு. அதை எல்லாம் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள் என்றால் அங்கேயே வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். கமர்ஷியலாக ஒரு பாடலை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு தினேஷ் மாஸ்டர் மெனக்கெடுவார். என்னுடைய சீனா தானா, தெற்கு சீமையிலே போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் உடைய நடன அமைப்புதான். இந்த பாடலையும் அவர் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரலும், இசையும் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இந்த பாடலை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஏழு நாட்கள் செலவு செய்து நேர்த்தியாக எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இந்த பாடல் வந்திருக்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் எழில் பேசுகையில், படம் எடுத்து மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக இப்படி ஒரு ஆல்பம் மூலம் ஹீரோ, இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் என அனைவரும் மக்களிடம் சென்றடைவது நல்ல விஷயம். இது புத்திசாலித்தனமான நகர்வும் கூட! பாடல் தானே என்று ஏனோ தானோ என செய்யாமல் சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் இதில் பணியாற்ற வைத்து நேர்தியாக எடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், முழு படத்திலிருந்து ஒரு பாடலை பார்க்கும் திருப்தி இதில் கிடைத்தது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல படங்கள் கொடுக்கும் இயக்குநர்கள் குறைந்து விட்டார்கள். அவர்களை சரியாக பயன்படுத்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தவறி விட்டார்கள். தமிழ் திரையுலகை காப்பதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். மற்றபடி, இந்தப் பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் பலராம் ஜெ பாலாஜி பேசுகையில், கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை பிசினஸை எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. குடும்பத்தினர் சம்மதத்தோடு திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன வீடியோக்கள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய முதல் பாடல் 2025 இல் வெளியானது. பிறகு நண்பர் ஒருவர் மூலமாக ராஜா அறிமுகம் கிடைத்தது. எடுத்ததுமே ஹீரோவாக படம் செய்யாமல், நமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு பின்பு படம் செய்யலாம் என ராஜா சாரிடம் சொன்னேன். அவரும் சம்மதம் சொன்னார். அப்படி உருவானதுதான் சைலன்ட் இன்ஃப்ளூயன்சர். தினேஷ் மாஸ்டர், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button