“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

வி.ஜி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் என். வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர். மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என். வெங்கடேஷன் பேசுகையில், நான் பல கதைகள் கேட்டேன், அதில் மணிகண்டன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசாரணை கைதி என்ற தலைப்பை நான் தான் வைத்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரா பேசுகையில், இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் மிக சவாலாக இருந்தது. காமினேஷன் அதிகம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறேன். 25 வருடங்களுக்குப் பிறகு கஷ்ட்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த சண்டைக்காட்சிகளைப் பார்த்த பிறகு நான் யார் ? என்பது உங்களுக்கு தெரியும். பேரரசு சார் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். படம் வெளியானால் என் திறமை உங்களுக்கு தெரியும், இந்த 2026 ஆம் ஆண்டு நான் யார் என்பது தெரியும். சண்டைக்காட்சிகளை பாருங்கள், பிடித்திருந்தால் பாராட்டுங்கள் என்றார்.
படத்தின் கதாநாயகன் உன்னி கிருஷ்ணன் பேசுகையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு ரொம்ப நன்றி. அவரை நான் பார்த்ததே இல்லை, இன்று தான் பார்க்கிறேன். போனில் மட்டும் தான் பேசுவார். நல்லா பண்ணுங்க, ஒன்று இரண்டு அதிகமானாலும் பரவாயில்லை முடித்துக் கொடுத்துட்டு போங்க, என்று சொல்வார். நாங்களே பல முறை அழைத்தாலும் படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார். அதற்கு காரணம் இயக்குநர் மணிகண்டன் தான். அவர் மிக சிறப்பாக பணியாற்றினார். இவரைப் போல் அமைதியான இயக்குநரை நான் பார்த்ததே இல்லை. ஒருவரையும் திட்டாமல் வேலை வாங்குவார். எனக்கு அவர் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு என்றார்.

படத்தின் கதாநாயகி ரித்விக்கா ஸ்ரேயா பேசுகையில், தமிழ் அதிகம் பேச மாட்டேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வெங்கடேஷன் மற்றும் இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி. உன்னி சொன்னது போல் தான், இயக்குநர் மணிகண்டன் ரொம்பவே அமைதியானவர், யாரையும் திட்ட மாட்டார். யாராவது தவறு செய்தால் கூட பரவாயில்லை, மறுபடியும் பண்ணுங்க பண்ணுங்க, என்று சொல்லி ஊக்கம் கொடுப்பார். எனக்கு இது இரண்டாவது படம், ஸ்டண்ட் வராது ஆனால் என்னை வைத்து சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். நான் பயத்துடன் தான் கிரவுண்டில் நின்றேன், அப்போது மதுரா வந்தார், பயப்படாதீங்க, உங்களால் முடியும், என்று சொல்லி என்னை ஸ்டண்ட் பண்ண வைத்தார். ஸ்டண்ட் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். கேமரா மேன் என்னை அழகாக காட்டியிருக்கிறார். என்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது, அவருக்கு நன்றி. உன்னி உள்ளிட்ட என் உடன் நடித்த சக நடிகர்களுக்கு நன்றி. தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி. என்னை இந்த துறைக்கு வர அனுமதித்த என் பெற்றோர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி என்றார்.

பாடலாசிரியர் கலைக்குமார் பேசுகையில், விசாரணை கைதி படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. நான்கும் வெவ்வேறு ரகங்களில் நன்றாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் அனைவரும் நன்றாக பண்ணியிருக்காங்க. இயக்குநருக்கு முதல் படமாக இருந்தாலும், முதல் படம் போல் தெரியாமல் மிக சிறப்பாக பண்ணியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம், வேலை கொடுப்பதற்கு முதல் நாளே ஊதியத்தை கொடுத்து விடுவார். பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடமை ஒப்பந்தம் செய்த போது, அவர்களுக்கான ஊதியத்தை கொடுத்துவிட்டு மறுநாள் தான் பாட வைத்தார்கள். அவர்களைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இப்படி தான் செய்தார். இவரை போன்ற தயாரிப்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார்.
பாடலாசிரியர் ஜி.சரவணன் பேசுகையில், நான் இதில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பாடல் எழுதும் போதே ரசிகர்கள் மனதில் வரிகள் நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறேன். இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடையும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் பேசுகையில், நான் அரசு ஊழியர், சுகாதாரத்துறையில் இருந்தேன். மதுரையில் பிறந்தேன். நாடகம், விழிப்புணர்வு படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் சென்னை வந்து பாரதிராஜா பள்ளியில் பயின்று நடிப்பு கற்றுக்கொண்டேன். அங்கே பேரரசு, பாக்யராஜ் வருவாங்க. என்னுடைய எழுத்துகளை பார்த்தார்கள், வேற லெவலில் இருக்கே, முன்னாடியே ஏன் வரல, என்று சொல்வார்கள். பிறகு பாராதிராஜா சார் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதே போல் நடித்தேன். செல்லாக்காசு என்ற படத்தில் நடித்தேன், ஒரு பக்கம் காலே இல்லாதது போல் நடித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் படத்தில் நடித்துவிட்டு மற்றொரு இயக்குநரை நான் வியந்து பார்த்தேன் என்றால் அது மணிகண்டன் தான். அவர் திருப்தியே ஆக மாட்டாரு. பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார், அவர் நினைத்தது போல் வரவில்லை என்றால் விடவே மாட்டார். அவருக்கு நிறைய விசயங்கள் தெரியும், அவரை ஏமாற்றவே முடியாது. சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள், மணிகண்டனும் நிச்சயம் சாதிப்பார். படத்தில் ஒரு காட்சி இருக்கிறது, அதை பார்ப்பவர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள். இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.சுந்தராஜன், பாக்யராஜ் ஆகியோர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். படம் நிச்சயம் ஜெயிக்கும். நானும் அரசு பணியில் இருந்து திரையுலகத்திற்கு வருகிறேன், உங்களுடைய ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துகள் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் பேசுகையில், ஹீரோ உன்னி கிருஷ்ணன் என் நெருங்கிய நண்பர். மகேந்திரன், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முக்கியமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரிய நன்றி. இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் தயாரிப்பது சாதாரண விசயம் இல்லை. சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது, பெரிய படங்களின் வருகையினால் சிறிய படங்கள் மக்களிடம் சேர முடியாமல் போகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த படத்தை தயாரித்த வெங்கடேஷன் சாருக்கு பாராட்டு. ஹீரோ உன்னி கிருஷ்ணன் சிறப்பாக நடிப்பார். அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தார். அவருடைய உழைப்புக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். இந்த படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு கடவுள் ஆசியால் வெற்றி கிடைக்க வேண்டும் என்றார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசுகையில், ஹீரோ உன்னி, தன்னம்பிக்கையோடு இருக்கிறார். காவல்துறை உடையில் மிக பொறுத்தமாக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் அவர் நினைத்தது கிடைத்ததா என்றால் அது தெரியாது. ஆனால், எதிர்காலத்தில் அவர் பல பெரிய படங்களை எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கேமரா மேனின் பணி மிக சிறப்பாக இருந்தது. சண்டைக்காட்சிகள் சிறப்பு, ஸ்டண்ட் மாஸ்டர் அண்னாவின் வலி எனக்கு புரியுது, அவரை சினிமா கைவிடாது. தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டு இருந்த போது, தம்பி நாம சேர்ந்து ஒரு படம் பண்ட்றோம் என்று சொன்னார், மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், விசாரணை கைதி பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதிகமாக மகேந்திரன் தான் சந்தோஷப்பட்டார். படத்தின் ஹீரோ உன்னி கிருஷ்ணன், டூயட் , ஆக்ஷன் பண்ணதை விட அவரது தாடி தான் எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு ஹீரோவிடம் ஒரு ஸ்டைல் இருக்கும், அதுபோல் உன்னியிடம் தாடி ஒரு ஸ்டைல். படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு வாழ்த்துகள். அவரை பார்க்கும் போதே தெரிகிறது கல்லம் கபடம் இல்லாதவர் என்று. இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். அமைதியாக இருக்கிறார் அதிலே தெரிகிறது, அவரது படம் பேசும் என்று. நாயகி ரித்விக்கா ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகள். வில்லனாக நடித்தவருக்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர், எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “விசாரணை கைதி நல்ல தலைப்பு. இத்தனை நாட்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. விசாரணை, கைதி என இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த ‘விசாரணை கைதி’ படமும் பெரிய வெற்றி பெறும். நடிகர் உன்னி கிருஷ்ணன், ஒரு போராளி. அவரும் எதாவது ஒரு படத்தில் நடித்து, எதாவது பெயர் வாங்கிட மாட்டோமா என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில், தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருப்பார். எந்த படமாக இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பார். அசால்டு மதுரா, மதுரா என்றாலே அசால்டு தான். நீங்க அசால்டா ஜெயிச்சிடுவீங்க. 2026 சொன்னீங்களே உங்களுக்கும் நிச்சயம் கைகொடுக்கும். கவிஞர்கள் கலைக்குமார், சரவணன் இருவருக்கும் வாழ்த்துகள். படத்தின் தயாரிப்பாளரை பார்க்கும் போது தயாரிப்பாளர் போலவே தெரியல, வாய்ப்பு கேட்டு வந்தவர் போல இருக்கிறார். நான் இப்போது மதிப்பது பெரிய தயாரிப்பாளர்களை அல்ல, சிறிய தயாரிப்பாளர்களை தான். காரணம், பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய கலைஞர்களை தான் போடுகிறார்கள். ஆனால், இவரைப்போன்று சிறிய தயாரிப்பாளர்கள் தான் வளரும் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இவர்களை போன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இபோதைக்கு இவர்கள் தான் பெரிய தயாரிப்பாளர்கள். இருப்பவர்களுக்கு கொடுக்கிறவர்களை விட, இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள் தான் மனிதர்கள். இயக்குநர் மணிகண்டன் இந்த படத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது போல் அமைதியாக இருக்கிறார். நானும் அவரைப் போல் தான் இருப்பேன், என்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவர் தேர்வு செய்த தலைப்பே சிறப்பாக இருக்கிறது. படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்.
புதிய தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதியவர்கள் தொடர்ந்து படம் தயாரித்தால் தான் திரைப்படத்துறை வாழும். எனவே, சினிமாவை பற்றி தெரியாமல் படம் தயாரிக்க வருபவர்கள், அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களிடமோ அல்லது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அறிவுரை பெற்று படம் தயாரிப்பது நல்லது. விசாரணை கைதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
இறுதியாக இயக்குநர் மணிகண்டன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.



