“ஹபீபி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவில் வரவில்லை எனும் சொல்லுமளவுக்கு இஸ்லாமியர்கள் வாழ்வியலை இந்தப் படத்தில் மீரா கதிரவன் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களை ஏன் தீவிரவாதிகளாக காட்டுகிறார்கள் என்ற விவாதம் நடந்தது. அப்பொழுது தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்கள் அனைவரும், இஸ்லாமியர்கள் வாழ்வை நெருக்கமாக தெரிந்தவர்கள் தான் அவர்கள் குறித்த உண்மையான படம் எடுக்க முடியும். அதனால், மீரா கதிரவனை படம் எடுக்கச் சொன்னார்கள். அப்போது அவர் சம்மதம் தெரிவித்து மனதில் தாங்கிய கதையே ‘ஹபீபி!’ ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இது படமாக வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது நிறைவாக உள்ளது என்றார்.
சித்த மருத்துவர் சிவராமன், இயக்குநர் ராம் தான் இந்த படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். படம் பார்த்துவிட்டு குடும்பத்தோடு வந்த போது மனம் கனத்து விட்டது. எனக்கு திருநெல்வேலி சொந்த ஊர். கடையநல்லூர் வாழ்க்கை முறையை பற்றி தெரியும். அத்தனை இஸ்லாமிய நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால், இப்போது வரும் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை இப்படி காட்டுகிறார்கள் என்ற வருத்தத்திற்கு இந்தப் படம் விடுதலை கொடுத்துள்ளது. இது போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற வேண்டும் என்றார்.

இயக்குநர், நடிகர் கஸ்தூரி ராஜா பேசுகையில், இந்தப் படத்தில் என்னை சுதந்திரமாக நடிக்க அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. படம் வெளியானதும் என் மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் என அனைவரோடும் பார்த்தேன். என் மகள் விமல கீதா அழுதுவிட்டார். தனுஷ் படம் பார்த்துவிட்டு எனக்கு கௌரவமான ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள் என்றார். இந்தப் பெயரை வாங்கித் தந்த மீரா கதிரவனுக்கு நன்றி. இந்த படமும் யூசுப் கதாபாத்திரமும் எனக்கு இன்னொரு பிறவி. இஸ்லாமியராக நான் நிஜத்திலும் மாறிவிட்டேனோ என எனக்கு தோன்றும். இயக்குநராக கஸ்தூரிராஜா என்ற பெயரும் நடிகருக்கு யூசுப் என்ற பெயரும் வைக்கலாமோ எனவும் அடிக்கடி தோன்றும். மீரா கதிரவனுக்குப் பின்னால் இந்த படம் உருவாவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பல விருதுகள் இந்தப் படம் வாங்கி குவிக்கும் என்றார்.
தயாரிப்பாளர் கருப்பசாமி பேசுகையில், பறந்து போ’ படம் வெற்றி பெற்றது. அதற்கடுத்து ‘ஹபீபி’யும் எங்களுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. இதற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் இப்ராஹிம் பேசுகையில், மக்களிடத்தில் இந்த படத்தை கொண்டு போய் சேர்த்து வெற்றி படமாக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி! என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், 110 வருட தமிழ் சினிமாவில் இது என்னுடைய முதல் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த உணர்வு புதிதாக உள்ளது. ஏனெனில், இது என் முதல் நன்றி தெரிவிக்கும் விழா. கஸ்தூரி ராஜா போன்ற பெரியவர்கள் என்னை குரு என்று சொல்வது எனக்கு கூச்சமாக உள்ளது. இது எனக்கு முதல் முறை. என்னை சினிமாவிற்கு அனுமதித்த என் குடும்பத்திற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்குமே நன்றி. நெருக்கடியான தருணத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்திற்கு பணம் தந்து உதவினார். இயக்குநர் ராம் இந்த படத்தை தோளில் தூக்கி சுமந்த பிறகு தான் இதற்கு வெளிச்சம் கிடைத்தது. நண்பர் என்பதால் ராம் இதனை எனக்கு செய்யவில்லை. எல்லா நல்ல படங்களுக்கும் அவர் செய்வார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததில் சினிமாவுக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. அதை மாற்ற வேண்டும் என்றால் நாம் தான் முன்வர வேண்டும். இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன் என்றார்.



