ஆசை நிறைவேறிய சந்தோசத்தில் ஆர்.கே. செல்வமணி
தயாரிப்பாளரும் தொழிலாளர்களின் தலைவருமான செல்வமணி நீண்ட காலமாக தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலையில் தான் இருந்து வந்தார். சில வருடங்களுக்கு முன் தொழிலாளர்களுக்கு எதிராக படைப்பாளிகள் என்ற அமைப்பை உருவாக்கி தொழிலாளர்களை பல மாதங்களாக வேலை இல்லாமல் பட்டினி பசியோடு தெருவில் அலைய விட்டார். பிறகு தயாரிப்பாளர்களுடன் இணைந்து தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது நடிகர் சிம்புவுக்கு தொழில் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ள நிலையில் ஜசரிகணேசிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த படத்தை படப்பிடிப்பு நடத்த செல்வமணி அனுமதி வழங்கியிருக்கிறார்.தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தீர்மானத்தை மீறி செல்வமணி தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இந்த நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து புதிய நிர்வாகத்தின் கீழ் பெப்சி செயல்படும் வரை பெப்சி தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகள் நடத்தப்படாது,தயாரிப்பாளர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முடிவுக்கு மூலகாரணமே செல்வமணி தான். இவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல்வேறு காலகட்டங்களில் நடந்த செயற்குழுவில் இந்த முடிவை எடுத்தால் தான் பெப்சியின் நிர்வாகிகளின் ஆட்டத்தை அடக்க முடியும் என்று பேசியிருக்கிறார். அன்று செல்வமணி தயாரிப்பாளராக தயாரிப்பாளர்களின் மனநிலையை உணர்ந்து கூறிய அனைத்தும் இன்று செல்வமணி ஆதரவோடு நிறைவேறியிருக்கிறது. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் செல்வமணி தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய சந்தோசத்தில் இருக்கிறார்.
தயாரிப்பாளராகவும் தொழிலாளர்களின் தலைவராகவும் இரட்டை வேடம் போட்டுக்கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி வரும் செல்வமணியை இன்னுமா இந்த தொழிலாளர்கள் நம்புகிறார்கள் என்று சில தொழிற்சங்க நிர்வாகிகள் புலம்புகிறார்கள். தொழிலாளர்களின் தலைவராக முதலாளி இல்லாமல் தொழிலாளர்களில் ஒருவர் தலைவராக வந்தால் தான் தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்காக இயங்கும்.
ஆர் கே செல்வமணி போன்ற முதலாளிகள் கையில் தொழிற்சங்கம் இருந்தால் தொழிலாளர்கள் ( படைப்பாளிகள் பிரச்சனையின் போது கஷ்டத்தை அனுபவித்து போல் ) வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நிலை தான் உருவாகும். தற்போதாவது தொழிற்சங்க நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட்டு புதிய நிர்வாகத்தை அமைத்து தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.