24 மணி நேரம் இயங்க அனுமதி கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர்களுடன் ஏற்கனவே பேசி ஒப்புக்கொண்டபடி, திரைப்படங்களை ஓடிடியில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும்.

பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதற்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஓடிடியில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும்.

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ.150 வரையும் கட்டணம் நிர்ணயிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.

நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.

ஆபரேட்டர் உரிமத்துக்கு அரசாங்கம் புதிய வழிமுறையை வகுத்து தந்தது. அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டது போல் ஆபரேட்டர் உரிமம் தேவையில்லை அல்லது எளிய முறையில் ஆபரேட்டர் உரிமம் தரும்படி கேட்டுக் கொள்கிறோம். மால்களில் உள்ள திரையரங்குகளில் வணிக செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கியது போல் மற்ற திரையரங்குகளுக்கும் வணிக செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகள் நஷ்டமின்றி நடத்த முடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button