இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன்
ஜப்பானிய- இந்திய அனிமேஷன் படமாகக் கடந்த 1993-ம்ஆண்டில் தயாரிக்கப்பட்ட, “ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” திரைப்படம் இந்தியாவில் வரும் அக்.18ம் தேதி வெளியாகிறது.
இயக்குநர்கள் யுகோ சகோ, ராம் மோகன் மற்றும் கொயிச்சி சசகி ஆகியோர் இணைந்து இயக்கிய இந்த அனிமேஷன் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக வெளிவரவிருக்கிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் 4 கே ஃபார்மெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அனிமேஷன் ராமாயணம் ஏற்கெனவே 2000-ம்ஆண்டில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்திய திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடும் விநியோக உரிமையை கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பில்ம்ஸ் மற்றும் எக்சல் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளன. இது குறித்து கீக் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனர் அர்ஜுன் அகர்வால் கூறியதாவது: அனிமேஷன் திரைப்படமாக ராமாயணம் உருவாக்கப்பட்டிருப்பது இந்தியா-& ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் புதிய முயற்சியாகும்.
காலத்தைவென்ற இதிகாசத் தலைமகனான ராமர் குறித்த புதுமையான, துடிப்பான இந்த திரைப்படம் அனைத்து பிராந்தியங்கள், எல்லா வயது வரம்பைச் சேர்ந்த பார்வையாளர்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற வசூல் வேட்டை கண்ட திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த அனிமேஷன் ராமாயணம் திரைப்படத்திலும் பங்களித்துள்ளார்.