“மாமனிதன்” மெகா தொடருக்கான ஒத்திகையா?
யுவன் ஷங்கர் தயாரிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில், ஸ்டூடியோ-9 ஆர்.கே. சுரேஷ் வெளியிட்டுள்ள “மாமனிதன்”. இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி, கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளனர்.
ஒரு ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குழந்தைகளை ஆங்கில வழி பள்ளியில் இறக்கி விடும் போது, தனது குழந்தைகளும் ஆங்கிலம் பேச வேண்டும் என நினைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுகிறார். அப்போது பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து ஒருவரிடம் கொடுத்து, அவரால் ஏமாற்றப்பட்டு பொதுமக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்.
இதனால் ஊரை விட்டு வெளியேறுகிறார். அப்போது இளவயது முதல் தன்னுடைய இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொண்ட இஸ்லாமிய நண்பரிடத்தில் தனது நிலைமையை விளக்கி தனது குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு தலைமறைவாகிறார்.
தன்னை ஏமாற்றியவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை செய்து, அவர் வரும் வரை இங்கேயே தங்கலாம் என நினைத்து, டீ கடையில் வேலை கேட்கிறார். பின்னர் அவர் மூலம் வேலை கிடைத்ததும் அருகிலேயே தங்குகிறார். கனவனை இழந்த டீ கடை உரிமையாளரின் மகளுக்கு ஒரு பிரச்சினை வரும் போது ராதாகிருஷ்ணன் உதவுகிறார். பின்னர் அவர்கள் இவரை தன் குடும்பத்தில் ஒருவராக நினைத்து பாசம் காட்டுகிறார்கள். அவர்கள் கிருஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
பின்னர் அங்கிருந்து காசிக்குச் சென்று சாதுக்களுடன் தங்கி பல்வேறு வேலைகள் செய்து தனது குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகிறார். அப்போது தன்னை ஏமாற்றிய அதிபர் இவரிடம் இரவல் கேட்கும் போது.. அவரை மன்னித்து அவரது குடும்பத்தினரிடம் சேர்க்க நினைக்கிறார். ஆனால் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதும் பாவங்களை போக்கும் காசியின் புனிதங்களை பாதுகாக்க வேண்டுமே தவிர பாவம் செய்யக் கூடாது என்கிறார். மீதிக்கதை திரையில் காணுங்கள்.
இந்த ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஏன் சமீபத்தில் விசித்திரன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஆர்.கே. சுரேஷே கூட நடித்திருக்கலாம். விஜய் சேதுபதி போன்ற பெரிய நடிகருக்கான படமா என்பது தான் கேள்வி. சீனுராமசாமி படத்தைப் பொறுத்தவரை கதை தான் பேசப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
கதாநாயகியின் நடிப்பு எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைத்துள்ள படத்தில் பாடல்கள் பெரிதாக அமையவில்லை. மெகாத்தொடர் போல் கதை மிகவும் தாமதமாக நகர்கிறது.