தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
தமிழில் தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியல் முடிவாகியுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், வி.பி.எஃப் கட்டணப் பிரச்சினையால் புதிய படங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியில் நவம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் தேவையில்லை என்று க்யூப் நிறுவனம் அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் தீபாவளிக்குப் புதிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழல்படி சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரண்டாம் குத்து’, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்கோத்’ ஆகிய படங்கள் வெளியீட்டை உறுதி செய்துள்ளன. மேலும் ‘தட்றோம் தூக்றோம்’, ‘கோட்டா’ உள்ளிட்ட படங்களும் தீபாவளி வெளியீடு என்று அறிவித்துள்ளன.
‘எம்ஜிஆர் மகன்’, ‘களத்தில் சந்திப்போம்’ ஆகிய படங்கள் எந்தவித விளம்பரப்படுத்துதலும் செய்யவில்லை என்பதால் தீபாவளி வெளியீட்டிலிருந்து விலகிவிட்டன. ஆகையால், 4 படங்கள் மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது.
எந்தவொரு பெரிய நடிகரின் படமும் வெளியாகாத தீபாவளிப் பண்டிகையாக இந்த ஆண்டு அமைந்துள்ளது.