பொங்கல் விழாவில் தங்கக் காசா..? : சந்தோஷத்தில் பத்திரிகையாளர்கள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் தம்பி ராமையா, நடிகர் ஆண்டனி, சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்கள் முல்லை கோதண்டம், இளம் இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேசும் போது சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி, பத்திரிகையாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. பத்திரிக்கையாளர்களின் எழுத்துக்கள் தான் என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் அளிக்கிறது. எனது அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு உங்களின் ஆதரவு வேண்டும். உன்மையை எழுதுங்கள் என்று பேசினார்.
அதன் பிறகு மைக் பிடித்த நடிகர் தம்பி ராமையா இயல்பாக சுவாரஸ்யமான தனது பேச்சை தொங்கினார். முதலில் என்னை வளர்த்து ஆளாக்கியவர் எனது தாய். அவருக்குப் பிறகு எனது மனைவி தற்போது தாயைப் போல் என்னை கவனித்துக் கொள்கிறார். அதுபோல் தான் இந்த சங்கத்தின் தலைவி கவிதாவும் தாய் ஸ்தானத்தில் இருந்து சங்க உறுப்பினர்களின் நலனுக்காக உழைத்து வருகிறார் என்றார். நான் வாழ்க்கையில் தோற்றதற்கு காரணமே நான் எடுத்த முடிவுகள் தான். சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு விழாவில் என்னிடம் உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டார்கள்.அதற்கு என்னைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றேன். அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். முதலில் அனைவரும் உங்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்றதோடு தனது இளமைக்கால நினைவுகளையும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.
மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் கதாநாயகன் ஆண்டனி பேசும் போது கடந்த காலங்களில் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை தான் எனக்கு ஒரு முகவரியைத் தந்தது. அதன் பிறகு நான் நடிக்கும் படங்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் எழுதும் போது மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி என்று தான் எழுதுகிறார்கள். உங்களது எழுத்துக்கள் சிலருக்கு வழக்கமாக இருக்கலாம். ஆனால் எனக்கு வாழ்க்கையாக மாறியிருக்கிறது என்றார். இவரது பேச்சு சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாகவும், எளிமையாகவும் இருந்தது.
அதன் பிறகு பேசத் தொடங்கிய சங்கத்தின் தலைவி கவிதா விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களைப் பற்றி கலகலப்பாக பேசினார். பின்னர் கொரோனா மிகவும் வேகமாக பரவுகிறது, அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஆகையால் உறுப்பினர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
விழாவில் ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள், 25 கிலோ அரிசி, தங்கக் காசு,1 கிலோ சுவிட்பாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப் பட்டது.