இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட “மூத்தகுடி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
The Sparkland நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குநர் ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான உணர்ச்சிகரமான திரைப்படம் “மூத்தகுடி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.
‘புது நெல்லு புது நாத்து’ படப்பிடிப்பிறகாக இயக்குநர் பாரதிராஜா நெல்லை சென்றிருந்த போது, செவத்தியாபுரத்தில் நடந்த நாடக விழாவில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்ற நாடகத்திற்காக கதாசிரியர் சரக்குட்டிக்கு பரிசு வழங்கினார். தற்போது அந்த நாடகம் தான் திரைவடிவமாக மாறி, “மூத்தகுடி” திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குநர் பாரதிராஜாவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த சிரத்தையெடுத்து, கடினமாக உழைத்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது படக்குழு. நாம் வாழ்ந்த காலகட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.
மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூத்த நடிகை கே ஆர் விஜயா அவர்கள் இப்படம் மூலம் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.
‘சாவி’ படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் எதிர்நாயகன் பாத்திரம் செய்துள்ளார். அறிமுக நாயகி அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்னண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“அசுரன்” திரைப்பட படப்பிடிப்பு நடந்த, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், விரைவில் இப்படத்தின் இசை,டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.