விஜய் ஆண்டனி எப்போதும் புதிய முயற்சிகளை கையாளும் நடிகர் ! – நடிகர் ஆர்யா

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் இணைத் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த்த சங்கர் பேசியதாவது, “லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பாக நான் பேச வந்துள்ளேன். எங்களுக்கு இதுநாள் வரை ஊடக நண்பர்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி. ’சார்பாட்டா’ படத்தில் ஆர்யா மாஸ் செய்துள்ளார். இதன் இரண்டாம் பாகத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம். விஜய் ஆண்டனி தான் என்னை ‘சைத்தான்’ படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இப்போது மீண்டும் கொலை’ மூலம் அவருடன் இணைந்திருக்கிறேன். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் இருப்பது எனக்கு பெருமை என்றார்.

இயக்குநர் பாலாஜி குமார் பேசுகையில், விஜய் ஆண்டனி இல்லாமல் இந்தப் படம் கிடையாது. அவர்தான் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்தார். படத்தில் ப்ளாஷ்பேக் அதற்குள் ப்ளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தைக் கோரும் படம் இது. நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் படத்திற்காக அற்புதமாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே ஒரு குறும்பு உள்ளது. அதையும் கொண்டு வர வேண்டும், அதே சமயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை மீனாட்சியும் சிறப்பாக நடித்துள்ளார். ரித்திகா, அர்ஜூன் சிதம்பரம் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர் என்றார்.

இசையமைப்பாளர் கிரீஷ் கோபால கிருஷ்ணன் பேசுகையில், சமீப காலத்தில், எதுவும் கெஸ் பண்ண முடியாத தமிழ் படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ‘கொலை’ படமும் வெற்றி பெறும். ஒளிப்பதிவு, இசை என தனித்தனியாக பிரித்து பார்க்காமல் எப்பொழுது படமாக நன்றாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் சொல்கிறார்களோ அப்போதே அது சிறந்த படமாக இருக்கும். ‘கொலை’யும் அதில் ஒன்று என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல! எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலாஜி, எலோன் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் எலான் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம். நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் சிறந்த பணியைக் கொடுக்கக் கூடியவர்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button