தேர்தலில் விஸ்வரூபம் எடுத்த “சர்க்கார்” கதை திருட்டு விவகாரம்
இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலில் பிரதானமாக பேசப்பட்ட விவகாரங்களில் ஒன்று நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படத்தின் கதை திருட்டு விவகாரம். இந்த படத்தின் கதை செங்கோல் என்ற தலைப்பில் இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் ஏற்கனவே எழுதி பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் சர்க்கார் படம் வெளியான போது பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தேறியது. இந்த விவகாரத்தில் பாக்கியராஜ் சரியான முடிவெடுத்து கதையை முருகதாஸ் திருடியது உண்மை தான் என்று கூறியதோடு, அதற்கான தீர்வையும் வருண் ராஜேந்திரனுக்கு வழங்கினார்.
தற்போது இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.இந்நிலையில் இணை இயக்குனர் வருண் ராஜேந்திரன் சர்க்கார் படத்தின கதை சம்பந்தமாக அப்போது நடைபெற்ற சம்பவங்களை இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது
என் சக, சகோதர, உறுப்பினர்களுக்கு வணக்கம்.
“எழுத்தாளர்கள் சங்கம் “
அப்படி ஒன்று இருப்பதே நீண்ட காலமாக பல பேருக்கு தெரியாது . பாக்யராஜ் அந்த சங்கத்திற்குத் தலைவராக வந்து அமர்ந்த பின்புதான் இப்படி ஒரு சங்கம் இருப்பது எல்லோருக்கும் தெரியவந்தது. நான் எழுதிய செங்கோல் என்ற கதை மிகப்பிரபலமான இயக்குனரால் திருடப்பட்டது. அதைத் தயாரித்ததும் பெரிய நிறுவனம். ஆனால் நியாயம் ஜெயிக்க வேண்டும், தர்மம் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக போராடி அதில் வெற்றி கண்டவர் திரு பாக்யராஜ். அவர் இல்லை என்றால் இந்த தீர்ப்பு கிடைத்திருக்காது.
ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் சங்கம் இருப்பதே தெரியாமல் இருந்ததால், மாதத்திற்கு இரண்டு, மூன்று கதைகள் பதிவாவதே அரிது. ஆனால் இன்று பாக்யராஜ் என்னுடைய செங்கோல் கதைக்கு அவர் வாங்கிக் கொடுத்த தீர்ப்பினால் மாதம் இருபது முதல் , முப்பது கதைகள் பதிவாகிறது. எழுத்தாளர் சங்கத்திற்கு அப்படி ஒரு பெருமையைத் தேடித்தந்துள்ளார்கள் .
“சர்க்கார் படத்தின் கதை என்னுடையது, திருடியவர் ஏ ஆர் முருகதாஸ் ” அப்படி இருக்க அவரை தற்போது சங்கத்தின் தலைவராக இருக்கும் செல்வமணி அவருடைய அணியில் சேர்த்துக்கொண்டு , அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார். அப்படி என்றால் அவர் ஒரு தப்பான நபர் என்று தெரிந்தும் அவருக்கு எப்படி துணை போகிறார்! ஒரு கதை திருடனுக்கு உடந்தையாக, இருப்பது வெட்கக் கேடானது என்பது நம் உறுப்பினருக்கு தெரியாதா?
வரும் 27 ஆம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, அது நமக்கு போகி பண்டிகை நாள்.
“பழையன கழிதலும் , புதியன புகுதலும்.” பழமையை அப்புறப்படுத்துவோம், புதுமையை உட்புக படுத்துவோம், நாம் அனைவரும் திறம்பட களப்பணி ஆற்றி, வெற்றி விழாவில் சந்திப்போம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.