“இரவினில் ஆட்டம் பார்” படத்தின் இசை வெளியீட்டு விழா !
ஆர் எஸ் வி மூவிஸ் சார்பில் சேலம் ஆர். சேகர் தயாரிப்பில் ஏ. தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவினில் ஆட்டம் பார். இப்படத்தின் ட்ரெய்லர் பாடல்கள்
வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ட்ரெய்லரை இயக்குநர் பேரரசு மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
விழாவில் பேரரசு பேசும்போது, முதலில் இந்தப் பட விழாவுக்கு வந்துள்ள நடிகை அஸ்மிதாவைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் இப்போது படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் யாருமே அந்தப் படத்தின் விழாக்களுக்கு வருவதில்லை. இவர் வந்திருக்கிறார் என்கிற போது பாராட்ட வேண்டும். சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த நடிகர்கள் எல்லாம் விழாக்களுக்கு வருவதில்லை. ஆனால் சம்பளம் வாங்காத நாங்கள் தான் இந்த விழாக்களுக்கு வருகிறோம், வாழ்த்துகிறோம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது இளம் வயதினர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது, அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து போலீஸ் அழிப்பது பற்றிய கதை போல் தோன்றுகிறது.
இறவினில் ஆட்டம் பகலில் தூக்கம் என்பது நவராத்திரியில் சிவாஜி சார். பாடுவார் .அது திருடன் கதாபாத்திரத்தைப் பற்றியது. திருடர்கள் தான் இரவினில் தங்கள் வேலைகளைச் செய்வார்கள் .பகலில் தூங்குவார்கள் .ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.இரவில் நைட் ஷிப்ட் வேலைக்குச் செல்கிறார்கள். திருடர்கள் இரவில் தூங்குகிறார்கள் பகலில் ஆட்டம் போடுகிறார்கள்.
இந்தப் படம் ஒரு போலீஸ் கதையாகத் தோன்றுகிறது. திரைப்படங்களில் போலீஸ் வேடம் என்றாலே விஜயகாந்த் தான் ஞாபகத்துக்கு வருவார். எல்லா நடிகர்களுக்கும் ஒவ்வொரு படம் போலீஸ் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களுக்காகப் பேசப்படும். ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவர் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படங்கள் வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கும். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், ஊமை விழிகள், ஆனஸ்ட் ராஜ் என்று சொல்லிக் கொண்டே போகலாம். திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரம் என்றால் அவர் பெயர்தான் நினைவுக்கு வரும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.
அவரை வைத்து நாம் தர்மபுரி படம் எடுத்த போது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவருக்கு போலீஸ் கதாபாத்திரத்தை நான் கொடுக்கவில்லை. கிராமத்துப் பின்னணியில் கதை அமைத்தேன்.
நடிகர்கள்மாறிவிட்டது. இரவில் இன்னாருடன் தான் நடிப்பேன் இன்னாருடன் நடிக்க மாட்டேன் என்று கூறக்கூடாது. அப்படிக் கூறினால் அவர் நடிகரே கிடையாது.
தர்மபுரி படத்தில் விஜயகாந்த் அவர்களுடன் வடிவேலு நடிப்பதாகத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறினார். அதற்கு விஜயகாந்த் அவர்களும் ஒப்புக்கொண்டார். ஆனால் படம் முழுக்க வருவது போல் அந்தப் பாத்திரம் அமைந்து இருக்கும் என்பதால் நான்தான் எம் எஸ் பாஸ்கரை நடிக்க வைத்தேன். கால்ஷீட் பிரச்சினை வரும் என்பதால் தான் நாங்கள் வடிவேலுவை நடிக்க வைக்கவில்லை. மற்றபடி அவர்களுக்குள் எந்த விதமான கசப்புகளோ இல்லை. அப்படி அனைவரையும் அன்போடு பார்ப்பவர் தான் விஜயகாந்த். இந்தப் படம் போலீஸ் கதை என்பதால் அவர் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”இவ்வாறு பேரரசு பேசினார்.
விழாவில் கலந்துகொண்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் பேசும்போது, இங்கே தயாரிப்பாளரோடு நல்லமனதோடு ஒத்துழைத்த இயக்குநரை நான் பாராட்டுகிறேன். இப்படித்தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சினிமாவில் நடிகர்களைக் காப்பாற்ற நாலாயிரம் பேர் இருக்கிறார்கள். நடிகைகளைக் காப்பாற்ற நிறைய பேர் இருக்கிறார்கள்.தயாரிப்பாளரைக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள்? இங்கே விழாவுக்கு வந்துள்ள இந்த நடிகையைப் பாராட்டுகிறேன். தான் நடித்த படத்தின் விழாவிற்கு வருவது அவர் வழக்கமாக இருக்கிறது. சின்ன படம் பெரிய படம் என்று சொல்வார்கள். அப்படிச் சொல்லக்கூடாது. ஐந்து கோடியில் படம் எடுத்து ஐம்பது கோடி வசூல் செய்தால் அது தான் பெரிய படம்.
நடிகர் நடிகைகளுக்கு பொறுப்பு இருக்கிறது.பொறுப்பு இல்லை என்றால் அந்தப் பொறுப்பில்லாத நடிகர்களை நான் வெறுப்பாகத்தான் பார்ப்பேன். நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. தயாரிப்பாளர்கள் இல்லாமல், தயாரிப்பாளர்களை விட இயக்குநர்கள் இல்லாமல் நடிகர்கள் இல்லை.இங்கே டாடா படத்தின் இயக்குநர் வந்திருக்கிறார். சாதாரணமாக வந்த அந்தப் படம் பெரிய படமாகி விட்டது. நூறு கோடியில் படம் எடுத்து ஐம்பது கோடி இழப்பு என்றால் அது எவ்வளவு பெரிய ஹீரோ படம் என்றாலும் அது கேவலமான படம் தான்.
பெரிய படம் என்பது பணம் செலவு செய்வதில் அல்ல . சின்ன முதலீட்டில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிகர்களிடம் வேலை வாங்கி தொழில்நுட்ப கலைஞர்களிடம் வேலை வாங்கி அற்புதமாக உருவாக்கப்படுவதில் தான் இருக்கிறது,அந்தப் படம் சின்ன படமா பெரிய படமா என்பது.இயக்குநர்கள் வளர வேண்டும்.எப்போது வளருவார்கள்? தயாரிப்பாளர்களைக் காப்பாற்றி விட்டால் வளர்வார்கள்.தயாரிப்பாளர்களைக் காப்பாற்றி விட்டால் அது வெற்றியே கிடையாது.ஓர் இயக்குநர் பெரிதாக வெற்றி பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு அது உறுத்திக் கொண்டிருக்கும் நாம் வளர்ந்து விட்டோம் தயாரிப்பாளர் வளரவில்லையே என்று .இந்த உறுத்தல் நடிகர் நடிகைகளுக்கு இருக்காது.காசு எப்போது வரும்? டப்பிங் முன்னாடியே வாங்கிவிட்டு கழன்று கொண்டு விடலாம் என்றே இருக்கும்.
இந்தத் தயாரிப்பாளர் சேலத்தில் இருந்து வந்து அஜித் மாதிரி ஒரு நடிகரை நடிக்க வைத்துப் படம் எடுக்கிறார் .அது வெற்றி பெற்றுவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் படமான அதன் வெற்றி அஜித்தால் வந்தது அல்ல.அதை இயக்கிய இயக்குநரால் வந்தது. ஆனால் அந்தப் படம் வெற்றி பெற்றுவிட்டால் அஜித் பின்னால் எல்லாரும் ஓடி விடுவார்கள். இயக்குநரை விட்டு விடுவார்கள்.இது அஜித்துக்கு மட்டுமல்ல எல்லா ஹீரோக்களுக்கும் தான் சொல்கிறேன். பாலச்சந்தர் மட்டும் ரஜினியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் ரஜினி இருப்பாரா தெரியாது? இங்கே தயாரிப்பாளருக்கு மரியாதை கொடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள்.ஒரு படம் எடுக்க தயாரிப்பாளர் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.சேலத்தில் இருந்து வந்திருக்கும் தயாரிப்பாளர் சேகரை நான் வரவேற்கிறேன். ஏனென்றால் அந்த சேலத்தில் தான் மாடர்ன் தியேட்டர் இருந்தது. டி ஆர் சுந்தரம் தான் எம் ஜி ஆரையும் கலைஞரையும் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார். அந்த சுந்தரம் தான் வெளிநாட்டுக்காரரான எல்லிஸ் ஆர் டங்கனை தமிழ்ப் படம் இயக்க வைத்தார். இப்போதெல்லாம்,சில இயக்குநர்களுக்கு தலைக்கனம் ஏறி விடுகிறது. படப்பிடிப்பு ஆரம்பித்து மூன்று நாள் ஆகிவிட்டாலே தயாரிப்பாளரை ஏதோ வேலைக்காரரைப் போல் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். பெரிய ஹீரோக்களால் இங்கே சினிமா வாழவில்லை.
பெரிய தயாரிப்பாளர்களால் இங்கே சினிமா வாழ வில்லை. பெரிய ஹீரோ பெரிய தயாரிப்பாளர்கள் சேர்ந்து ஆண்டுக்கு 32 படங்கள்தான் எடுக்கிறார்கள். ஆனால் இந்த சின்ன தயாரிப்பாளர்கள் தான் ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். அப்படியானால் நாங்கள் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கிறோம் என்று பாருங்கள்.
சேலத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து படம் எடுக்க வேண்டும் என்று இங்கே தம்பி பேசினார்.ஆனால் உங்கள் அளவுக்கு ஹீரோக்களுக்கு அக்கறை இருக்கிறதா? தன்னை வாழவைத்த சென்னையை விட்டு விட்டு பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு ஆண்டுகளாக ஹைதராபாத்தில் செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள். மும்பையில் இரண்டு ரஜினி படம் எடுத்திருக்கிறார்கள் இவை எல்லாமே தமிழனின் முதலீடு. படம் வெளியானால் கொட்ட வேண்டியது தமிழ்ப் பணம். ஆனால் நீ வேலை கொடுப்பது ஹைதராபாத், மும்பை.
அஜித் ஒரு படம் முழுக்க வெளிநாடு என்று எடுத்திருக்கிறார்கள். நான் பெரிய ஹீரோக்களையும் பெரிய இயக்குநர்களையும் கேட்டுக் கொள்வது இதுதான் கதைக்கு என்ன தேவையோ அதற்கு மட்டும் வெளியூர் வெளிநாடு செல்லுங்கள். தமிழக முதல்வர் இப்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
140 ஏக்கரில் 500 கோடியில் பூந்தமல்லியில் ஒரு திரைப்பட நகரம் உருவாக இருப்பதாக அறிவித்துள்ளார். சின்ன தயாரிப்பாளர் அங்கே போய் ஒரு படத்தை எடுத்து விட்டு வந்துவிட முடியும் இவ்வாறு கே .ராஜன் பேசினார்.
விழாவில் யாத்திசை படத்தின் இயக்குநர் தரணி ராஜேந்திரன், டாடா படத்தின் இயக்குநர் பாபு கே. கணேஷ்,தூக்கு துரை இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், சிறுமுதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச்செல்வன்,
இசையமைப்பாளர் நல்லதம்பி, படத்தில் நடித்திருக்கும் நடிகை அஸ்மிதா, நடிகர் எம் ராஜேந்திரன் ,பாடல் ஆசிரியர் செல்வராஜா,ஒளிப்பதிவாளர் ஜீனோ பாபு, நடிகர் ஜி எச் ராஜேந்திரன், பாடகர்கள் அபிஷேக் ,விஷ்வா ,சண்டை இயக்குநர் டான் ஈஸ்வரன், இயக்குநர்கள் அலிகான், முருகன், படத்தின் கதாநாயகன் கே.எஸ்.உதயகுமார்,படத்தின் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் தயாரிப்பாளர் சேலம் ஆர். சேகர்,மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.