“பைரி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. இந்தப் படம் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பைரி திரைப்படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி பேசும் போது… பைரி என்பது ஒரு வகை கழுகு இனம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம் தான் பைரி. இந்த புறா பந்தய கதைக்களம் என்பது என் வாழ்வில் நான் பார்த்து வளர்ந்த வாழ்வியல் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. குறும்படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே கேமராமேன் வசந்த் எனக்குப் பழக்கம். என் குறும்படத்திலேயே உழைப்பைக் கொட்டி வேலை செய்திருப்பார். அவர் தான் இப்படத்தின் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். இப்படம் உருவாவதற்கு அவர் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. எடிட்டிங் சதீஷ் செய்திருக்கிறார். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்தே சதீஷ் பழக்கம். தடம் புகழ் அருண் இசையமைத்திருக்கிறார்.. இப்படம் ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணம் சையது பிரதர். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்து அவர் எனக்கு பழக்கம். அவரால் தான் இப்படம் நடந்தது. அவருக்கு நன்றி. பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் படத்திற்கு பேருதவியாக இருந்து வரும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

அதற்கு அடுத்ததாக இன்று இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் சக்தி ஃபிலிம் பேக்டரி சத்திவேலன் தான். அனைவருமே படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாலும் யாரும் அதை வாங்கி வெளியிட முன்வரவில்லை. எந்தவிதமான சப்போர்ட்டும் கிடைக்காமல் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் சக்திவேலன் இப்படத்தை பார்த்தார். புது இயக்குநர், புது டீம், ஆடியன்ஸுக்கு பரிச்சயமான நடிகர் நடிகைகள் இல்லை என்றெல்லாம் யோசிக்காமல் இப்படத்தை வாங்க அவர் முன் வந்ததால் தான் இன்று எங்களுக்கு இப்படி ஒரு ப்ளாட்பார்ம் கிடைத்திருக்கிறது. படம் கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். நீங்களும் படம் பார்க்கும் போது அதை உணருவீர்கள் என்று நம்புகிறேன். படத்தில் 950 சிஜி ஷாட்கள் இருக்கின்றன, 4 நிமிடத்திற்கு 75 இலட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் சிஜி சேகர் 35 நிமிடத்திற்கு சிஜி ஷாட்களை மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறரர் என்பது சிறப்பு. அவர் இல்லை என்றால் இப்படம் இல்லை.

கார்த்திக் பிரசன்னா கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அவருக்கு நன்றி. மனோபன் முதலில் பாடல் ஆசிரியராகத் தான் உள்ளே வந்தார். பின்னர் படத்தில் எக்ஸிகுயூட்டிவ் புரொடியூஷர் ஆக மாறினார். பத்து நபர்கள் செய்யக் கூடிய வேலையை ஒற்றை ஆளாக செய்து காட்டினார். வசந்த் அண்ணன், சதீஷ், மனோபன், சிஜி ரமேஷ் இந்த நால்வரும் இப்படத்திற்கு மிக முக்கியம்.

அருண்ராஜ் மிகச் சிறப்பாக மியூசிக் செய்து கொடுத்திருக்கிறார். வில்லுப்பாட்டு பகுதிகளும் பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. அவருக்கு நன்றி. பைட் மாஸ்டர் விக்கி மாஸ்டர் மூன்று சிறப்பான சண்டைக்காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படம் சூப்பராக வந்திருக்கிறது. கண்டிப்பாக வெற்றியடையும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. வெற்றிவிழாவில் சந்திப்போம் என்று உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.

நடன இயக்குநர் ஸ்ரீ கிரிஷ் பேசியதாவது…பைரி படத்தினை ஏற்கனவே குறும்படமாக செய்திருந்தார்கள். அப்பொழுதே ஜானை எனக்குத் தெரியும். ஆனால் குறும்படம் எடுக்கும் போது இருந்த ஜான் வேறு, இப்பொழுது இருக்கும் ஜான் வேறு. ஏனென்றால் படத்தில் எதெல்லாம் நன்றாக இருக்கிறதோ அதற்கெல்லாம் முதற்காரணம் ஜான் தான். ஏனென்றால் ஒரு கேப்டனாக படத்தில் என்ன வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்து தேவையானவற்றை வாங்கக் கூடிய இயக்குநர் அவர். அவருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்.

நடிகர் ஆனந்த் பேசியதாவது… முதலில் சையதுக்கு நன்றிகளைக் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் கற்றது தமிழ் படத்தில் நான் கதாநாயகிக்கு மாமனாக நடித்திருப்பேன். அதைப் பார்த்துவிட்டே என் குறும்படத்தில் கண்டிப்பாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். அப்படி சொன்னது மாதிரியே என்னைக் கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கிறார். சக்தி ஃபிலிம் பேக்டரி படம் ரீலீஸ் செய்யப் போகிறது என்கின்ற தகவல் கிடைத்ததும் மிகுந்த நம்பிக்கை வந்துவிட்டது. மிகப்பெரிய உழைப்பை ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் இயக்குநரும் கொடுத்திருக்கிறார்களே, இப்படம் என்ன ஆகப் போகிறது என்று கவலையாக இருக்கும். இனி அந்த கவலை இல்லை.

நடிகை விஜி சேகர் பேசியதாவது, இதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட இப்படம் எனக்கு ஒரு அடையாளம் கொடுக்கும் என்று நம்புகிறேன். ஒரு குறும்படத்தில் நடித்திருந்ததைப் பார்த்துவிட்டு என்னை அணுகி நான் படம் எடுக்கும் போது கண்டிப்பாக கூப்பிடுவேன் என்று இயக்குநர் ஜான் கிளாடி கூறினார். அது போல் கரெக்டாக என்னை கூப்பிடவும் செய்தார். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை சரண்யா ரவிச்சந்திரன் பேசும் போது… நான் இப்படத்தில் சித்ரா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். எங்கள் குழுவினர் சார்பாக நான் தயாரிப்பாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சக்தி பிலிம் பேக்டரி மூலம் இப்படம் வெளியாக இருப்பது மிகுந்த சந்தோசம் கொடுக்கிறது. படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் என்றார்.

நிர்வாகத் தயாரிப்பாளர் தினேஷ் பேசும் போது… சையத் எனக்கு 15 வருடப் பழக்கம். இப்படத்தைப் பார்த்த அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள், ஆனால் எல்லோருமே புதிதாக இருப்பதால் எப்படி கமர்ஷியலாக வொர்க் அவுட் ஆகும் என்று சந்தேகித்தார்கள். இயக்குநர் ஜான் இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் படங்களை நாம் வெற்றிப்படமாக்கி இருக்கிறோம். பைரி நம் ஊரின் கதை. மக்கள் அதை கண்டிப்பாக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜா பேசும் போது…பைரி படத்தில் நீ பார்க்கும் பார்வை என்கின்ற பாடலை எழுதி இருக்கிறேன். பாடல் வெளியாகிவிட்டது. நல்ல விதமாக எல்லோரும் எழுதி வருகிறார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன் என்றார்.

யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசும் போது… பைரி என்கின்ற திரைப்படம் எனக்கு முதன் முதலாக சக்திவேலன் மூலமாகத் தான் அறிமுகமானது. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அப்படத்தினைப் பற்றிப் பேசுவார். இயக்குநர் பேசும் போது வெகுளியாகப் பேசினார். ஆனால் அவருடைய படமும், அந்த கிராப்டிங்கும், அவர் ப்ரேமை கட்டமைத்த விதமும், அதில் கதாபாத்திரங்களை நடிகர்களை கையாண்ட விதமும் மிகச் சிறப்பாக ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு படத்தை ஆடியன்ஸுக்கு நெருக்கமாக மாற்றுவது என்பது ஒர் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு. இது வெறும் புறா சண்டையாக நின்று போவதில்லை. அதனையும் மீறி மனிதர்களின் உணர்வு, அரசியல், அந்த சமூகத்தின் அரசியலைப் பேசுகிறது. புதுப்பேட்டை, ஆடுகளம் படங்களைப் போல் பைரி திரைப்படம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வருடத்தின் மிகப்பெரிய சம்பவமாக பைரி இருக்கும். இவ்வருடத்தின் மிக முக்கியமான படங்களில் பைரி கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நாயகன் சையத் மஜீத் பேசும் போது… நான் கடந்த 14 ஆண்டுகளாக சினிமாவில் இயங்கி வருகிறேன். நாளைய இயக்குநர் துவங்கி பல குறும்படங்களில் நடித்து இருக்கிறேன். பல மேடைகள் பார்க்கும் போது எனக்கு மிக ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் எனக்கு நீங்கிய நாள் கண்டிப்பாக இதுதான் என்று சொல்வேன். இதற்கு நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது தயாரிப்பாளர் டி.கேவுக்குத் தான். அவருக்கு அடுத்து நான் நன்றி சொல்ல நினைப்பது சக்திவேலனுக்குத் தான். அவர் இன்றி எங்களுக்கு இந்த அடையாளம் கிடைத்திருக்காது. முதன் முதலாக படத்தைப் பார்த்த சக்தி என்னைக் கட்டிப் பிடித்து “நீ பின்னிட்ட” என்று வாழ்த்தினார். அப்பொழுது தான் எனக்கு உயிரே வந்தது.

இயக்குநர் ஜான் குறும்படம் எடுக்கத் துவங்கிய போதிலிருந்தே நாங்கள் இணைந்து பயணித்து வருகிறோம். இப்படத்திற்காக அசுரத்தனமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார் இயக்குநர் ஜான். அவர் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் தூங்கி நான் பார்த்ததில்லை. இப்படத்தின் வெற்றி இயக்குநர் ஜானுக்கு இன்னும் மிகப்பெரிய படங்களை கொண்டு வரும் என்று நம்புகிறேன்.

தயாரிப்பாளர் துரைராஜ் பேசும் போது.. நான் பேச வேண்டியதில் பாதியை சையத்தும் மீதியை இயக்குநர் ஜானும் பேசிவிட்டார்கள் ஒன்று சொல்லலாம். சினிமாவையே பார்க்காத என்னை இவர்கள் ஒரு தயாரிப்பாளராக ஆக்கிவிட்டார்கள் என்றார்.

சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது… நான் இப்படத்திற்கு அடையாளம் கொடுக்கவில்லை. பைரி திரைப்படம் தான் எங்கள் சக்தி ஃபிலிம் பேக்டரிக்கு அடையாளமாக மாற இருக்கிறது என்று சொல்லிக் கொள்கிறேன். கண்டிப்பாக இந்த ஆண்டிற்கான வெற்றிப்படங்கள் மற்றும் சிறந்த படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக “பைரி” இருக்கும். பதினைந்து வருடமாக கஷ்டப்பட்ட அத்தனை பேரும் சேர்ந்து ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார்கள். பைரி படத்தின் வெற்றியை சத்தம் போட்டு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button