“அழகி-2” வில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். உற்சாகத்தில் நடிகர் பார்த்திபன் !

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதேபோல் இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது.

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி தேவயானி, இளம் வயது பார்த்திபனாக நடித்த சதீஷ் ஸ்டீபன், ராமு சரவணன், கட்டையன், கட்டச்சி கதாபாத்திரங்களில் நடித்த செல்வம், சரஸ்வதி, அழகி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் K.M.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பாடலாசிரியர் கருணாநிதி, இணை இயக்குநரும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் தங்கர் பச்சான் பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் தேர்தல் பணிகளில் இருப்பதாலும் நந்திதா தாஸ் மும்பையில் இருப்பதாலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலயவில்லை என்பதை தொகுத்து வழங்கியவர் குறிப்பிட்டார்.

அழகி படத்தின் இணை இயக்குநரும் தற்போதைய சின்னத்திரை இயக்குனர் சங்கத்தின் தலைவருமான தளபதி பேசும்போது, “படம் வெளியாகி 22 வருடம் ஆகியும் கூட இப்போது வரை இந்த படம் குறித்து பல தகவல்களை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் துவங்கிய காலத்தில் நானும் தங்கர் பச்சான் இருவரும் தயாரிப்பாளர் உதயகுமாரை சந்தித்து இந்த கதையை கூறி அன்றே அவரிடம் சம்மதம் பெற்றோம். இந்த படத்திற்கு முக்கிய நட்சத்திரங்களை எளிதாக தேர்வு செய்து விட்டோம். ஆனால் சிறுவயது கதாபாத்திரங்களை தேடுவதற்காக பல பள்ளிக்கூடங்களுக்கு நேரிலேயே சென்று மாணவர்களை தேர்வு செய்தோம். அப்படி நாங்கள் ஒரு பள்ளிக்கு சென்ற போது எங்களைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினோம். அப்படியே பார்த்திபன் சாயலில் அச்சு அசலாக இருந்த அவரை பார்த்து ஆச்சரியப்பட்டு போனோம். ஆனால் அவர் உண்மையிலேயே தூங்கவில்லை என்பதும் எங்கே பார்த்திபன் போல சாயலில் இருக்கும் தன்னை பார்த்தால் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயத்தில்தான் அப்படி செய்ததாக பின்னாளில் கூறினார்.

அதேபோல இளம் வயது நந்திதா தாஸ் கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா தேர்வு செய்யப்பட்டதும் கூட ஒரு சுவாரஸ்யம் தான். கிட்டத்தட்ட அதே வயதில் உள்ள 25 பெண்களை ஆடிஷன் செய்து அதில் ஜெனிபர் என்கிற ஒருவரை தேர்ந்தெடுத்து மறுநாள் படப்பிடிப்பிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது ஏதேச்சையாக நடிகர் சங்கம் சென்றபோது அங்கிருந்த ஒருவர் மூலமாக மோனிகாவின் புகைப்படம் கிடைத்தது பின்பு அவரை வரவழைத்து ஆடிசன் செய்த போது நந்திதா தாஸின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார். அதன்பிறகு மறுநாள் நேராக படப்பிடிப்பிற்கு கிளம்பி வந்தார்.

இந்தப் படத்திற்கான வேலைகளை துவங்கிய போது நாயகியாக நடித்த நந்திதா தாஸ் என்னை அழைத்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். காரணம் எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. குறைவாகத்தான் உங்களுக்கு வசனம் இருக்கும் என சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்போது அதிகப்படியான வசனங்களை எனக்கு அனுப்பி உள்ளீர்கள் என்று கூறினார். பிறகு அவர்களை சமாதானம் செய்து வசனங்களை இன்னொரு வெர்ஷன் எழுதி அவரை நடிக்க வைத்தோம்.

பார்த்திபன் கூட சில முறை கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். அவரை நான் தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தேன். தேவயானிக்கு கூட அந்த நேரத்தில் ஒரு சிறிய கேப் விழுந்தது (இப்படி அவர் கூறியவுடனே அவரை திரும்பிப் பார்த்த தேவயானி, என்ன கேப் விழுந்தது ? என் திருமணமானதும் உடனே நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் படம் இதுதான். எந்த ஒரு கேப்பும் இல்லை என்று பதில் கொடுத்தார்). இந்த படம் தயாராகி முடிந்ததும் அப்போது முன்னணியில் இருந்த ஒரு தயாரிப்பாளருக்கு தனியாக படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்ற அவர் ஒரு வாரம் தயாரிப்பாளரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அலைக்கழித்த பின்னர் எதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள். இனிமேல் இந்த படத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். அது கூட நஷ்டமாகத்தான் முடியும் என்று கூறினார். அப்போது தயாரிப்பாளர் எந்த அளவிற்கு வேதனைப்பட்டார் என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் இந்த படத்தை பார்த்தார்கள். பார்த்த அனைவருமே படம் முடிந்து தங்களை அறியாமல் கண்களை துடைத்துக் கொண்டு அழுததை நான் பார்த்தேன். ஆதலால் படம் உடனடியாக விற்றுவிடும் என நினைத்தால் அனைவருமே தயக்கம் காட்டினார்கள். அதை எல்லாம் தாண்டி அழகி இவ்வளவு பெரிய சரித்திரம் படைத்துள்ளது. தயாரிப்பாளர் மனம் தளர்ந்த சமயத்தில் எல்லாம், இந்தப் படத்திற்கு என தனிக்கதை கிடையாது. ஆனால் எந்த வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருமே இந்த படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள் என அவரை ஊக்கப்படுத்துவேன். இப்போது ரீ ரிலீஸின் போதுகூட அவர் சற்று தயங்கியபோது இந்த படம் வெளியான சமயத்தில் பிறக்காதவர்கள் கூட இந்த படத்தை அழகாக ரசிப்பார்கள் என்று அவருக்கு தைரியம் கொடுத்தேன்” என்று கூறினார்.

நடிகை தேவயானி பேசும்போது,
“22 வருடம் கழித்து மீண்டும் எங்கள் படம் ரிலீஸாவது ஒரு மகிழ்ச்சியான தருணம். 22 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும் போது இப்படி மீண்டும் ஒருமுறை ரீலீஸ் ஆகும் என அப்போது நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. உண்மையிலேயே இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மிராக்கிள். அப்போதும் நடந்தது. இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு சந்தோஷ தருணம். ஒரு திரைப்படம் தயாரிப்பது பிரசவம் போல தான். 22 வருடத்திற்கு முன்பு ஒரு படத்தை சிரமப்பட்டு தயாரித்து அதை வெளியிட்டு வெற்றி பெற்ற பின்னர், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அந்த படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்கிறார் என்றால் நிச்சயமாக தயாரிப்பாளருக்கு ஒரு ஹேன்ஸ் ஆப். இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. இத்தனை வருடம் கழித்து நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோமே, இதுவே சந்தோசமான விஷயம். இதில் நடித்த குட்டிக்குழந்தைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். இதுபோன்ற அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இப்போது இருக்கிற இந்த தலைமுறையினருக்கு இதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அவர்கள் இதிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முடியும்.

என்னுடைய முதல் படமான காதல் கோட்டையில் தங்கர் பச்சான் தான் ஒளிப்பதிவாளர். தேசிய விருது வரை அந்த படம் சென்றது. எனக்கும் பெரிய பெயர் கிடைத்து என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு மறுமலர்ச்சி எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு பாரதி படம் எடுத்தபோது அதில் என்னை செல்லம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னதே தங்கர் பச்சான் தான். இதேபோல அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர். அவரது ஒளிப்பதிவே ஒரு பெயிண்டிங் போல இருக்கும். அவருடைய ஒளிப்பதிவில் நாம் மேக்கப் போடவே தேவையில்லை. இயல்பாக வந்து நடித்துவிட்டு போகலாம். உணர்வுகளுடன் விளையாடக்கூடிய ஒரு படைப்பாளி அவர்.

என் திருமணம் முடிந்த சமயத்தில் இந்த படத்தில் நடிக்கும்படி தங்கர் பச்சான் கேட்டார். என்னதான் காதல் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனைவி தனது கணவனை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்கிற அந்த கதாபாத்திர வடிவமைப்பு எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த உணர்வு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு உண்மையான கதாபாத்திரம் தான் வளர்மதி. அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அந்த அளவிற்கு அவர் படைப்பின் மீது நம்பிக்கை இருந்தது. இந்த படத்தை என்னுடைய மகள்களுடன் சேர்ந்து திரையரங்கில் சென்று பார்க்கப் போகிறேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள் என்று நினைக்கிறேன். பார்த்திபனுடன் இணைந்து பல நல்ல வெற்றி படங்களில் நடித்துள்ளேன். அதில் அழகியும் ஒன்று..

இப்போது பார்த்திபனிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு வளர்மதி பிடிக்குமா ? தனம் தான் பிடிக்குமா ?” என்கிற ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியையும் வீசினார்! கேள்வியை  கேட்டதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தன்னை மறந்து கைதட்ட, இப்பவே பதில் சொல்லுங்க என்று தேவயானி கேடக. நான் பேசும் போது பதில் சொல்கிறேன் என்று சொன்னார்.

நடிகர் பார்த்திபன் பேசும்போது, “தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. என்னிடம் வந்து ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார்  என்று என்னிடமே கேட்பார். நானே ஒரு டைரக்டர். என்னிடமே அப்படி கேட்பார். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்..  என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்களா என்று அதையேதான் பேசிக் கொண்டிருப்பார். அதனால் நிச்சயம் அவர்தான் அந்த தொகுதியின் நாளைய எம்பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

இங்கே தளபதி பேசியது எல்லாமே உண்மை விஷயங்கள்தான். ஆனால் உண்மைக்கு நாட்டில் மரியாதையே கிடையாது. பொதுவாகவே விநியோகஸ்தர்களுக்கு என ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அதை அழகி போன்ற படங்களின் மூலமாக உடைத்தது எல்லாம் ரசிகர்கள் தான். நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பெயர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் ‘அழகி’ தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த படத்தின் ரீ ரிலீஸ். காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால் தான் இந்த அழகியும் தோற்கவில்லை.

சண்முகத்திற்கு ஒரு காதல் இருந்தது போல வளர்மதிக்கும் அப்படி ஒரு காதல் இருந்து அதை சொல்லியிருந்தால் சண்முகம் நொறுங்கி போயிருப்பார். பொதுவாக பெண்கள் குடும்பத்தை கவனித்து கொண்டு, கணவனை எல்லாவிதமாகவும் அரவணைத்து செல்வதால் காதலியை விட மனைவியை பலருக்கும் பிடிக்கும். இந்த போஸ்டரில் கூட நந்திதா தாஸின் படத்தை விட தேவயானியின் படத்தை பெரிதாக வைத்திருக்க வேண்டும். காரணம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தின் மீது மிகப்பெரிய பூரிப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த விஷயத்தின் மகிமை பற்றி நாம் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படி ஒரு மகிமையான கதாபாத்திரம் தான் வளர்மதி என நான் எப்போதுமே சொல்வேன். (உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா தேவயானி ?) . தேவயானி கதாபாத்திரமும் அவர் அதில் நடித்த விதமும் சிறப்பாக இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே நந்திதா தாஸ் என்னிடம் எனக்கு இது செட் ஆகாது போல தெரிகிறது, நான் கிளம்புகிறேன் என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் நான் அவருக்கு வசனங்கள் சொல்லித்தந்து அந்த படத்தின் நடிக்க உதவியதை சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பலரும் இதில் பார்த்திபனின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள், அவருடைய குழந்தை பருவக் காட்சிகளை குறையுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் அந்த குழந்தைகளின் போர்ஷன் தான் படத்தின் வெற்றிக்கு மிகமிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்து தான் தற்போது 13 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் டீன்ஸ் என்கிற ஒரு அட்வென்சர் த்ரில்லர் படத்தை எடுத்து வருகிறேன். அடுத்த மாதம் அது வெளியாகிறது.

அழகி படத்தை தேவயானி ஒரு மேஜிக் என்றார். அதையே தான் தமிழில் கண் கட்டு வித்தை என்று சொல்வேன். சண்முகம் போன்ற ஒரு கால்நடை மருத்துவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது காதலியை பார்த்தால் ஒரு வேலைக்காரியாக கொண்டு போய் சேர்த்து விட்டிருக்க மாட்டார். ஒரு குடிசை எடுத்து ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்து அங்கே அவளை கவுரவமாக வைத்திருக்க முடியும். இந்த சந்தேகத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே தங்கர் பச்சானிடம் கேட்டேன். ஆனால் இது காதலியை பற்றிய கதை இல்லை, ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றிய கதை என்று கூறி கேள்விகள் கேட்காமல் நடிக்கும்படி கூறிவிட்டார். அதுதான் எத்தனை வருடங்கள் கழித்தும் இந்த படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து அழகி-2வாக இந்த படம் மாற வேண்டும் என்பது. தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி-2க்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button