கங்குவா
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார் சூர்யா.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் உறுதி செய்துள்ளது.
போஸ்டர் எப்படி?:
இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் எதிரெதிரே பார்த்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. பீரியாடிக் தோற்றத்தில் ஒரு கதாபாத்திரம், நவீன தோற்றத்தில் ஒரு கதாபாத்திரம் என இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது.
ஒருவர் கையில் கத்தியும், மற்றொருவர் கையில் துப்பாக்கியும் உள்ளது. இருவேறு கால சூழல்கள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் என படம் முன்ஜென்மம், மறுபிறவி உள்ளிட்ட அம்சங்களுடன் பேன்டஸியாக உருவாகியிருப்பதை போஸ்டர் உணர்த்துகிறது. இப்போஸ்டரில் படம் இந்த ஆண்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.