“எலக்சன்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய்குமார் நடிப்பில், இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில், பி. சக்தி வேலன் வெளியிடும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா பேசுகையில், “எலக்சன்” ஒரு அரசியல் திரைப்படம். அரசியல் என்றால் மேம்போக்கான அரசியலை சொல்லவில்லை. இதுபோன்ற வகையிலான திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் மிகவும் ரசித்தேன். ஆனால் இந்தத் திரைப்படம் தேர்தல் தருணத்தில் வெளியாகும் என்று நினைக்கவே இல்லை. படத்தின் இறுதி கட்ட பணிகள் ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. இதனைத் தொடர்ந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் நல்லதொரு தேதியை தேர்வு செய்து இப்படத்தை வெளியிடுகிறார்.
இந்தப் படத்தின் பணிகளை நாங்கள் 2021 ஆம் ஆண்டில் தொடங்கினோம். இதுபோன்ற அருமையான கதையை வழங்கியதற்காக இயக்குநர் தமிழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் அரசியல் சார்ந்த பிரச்சார படமாக இல்லாமல், குடும்ப உறவுகளை அழுத்தமாக பேசும் படைப்பாகவும், நல்லதொரு உச்சகட்ட காட்சியையும் இயக்குநர் வழங்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து, படத்தை உருவாக்கிய அவருடைய உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்தின் மூலம் இயக்குநர் தமிழுக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.
இப்படத்தின் வசனகர்த்தாவும், எழுத்தாளருமான அழகிய பெரியவன் பேசுகையில், இயக்குநர் தமிழின் கதையை முழுவதுமாக படித்து முடித்தவுடன் எனக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. ஏனெனில் இந்தக் கதை முழுக்க முழுக்க அரசியலைப் பற்றி பேசுகிறது. ஆனால் அரசியலை மட்டும் பேசவில்லை. மனிதர்களுடைய குணாதிசயங்களை, கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய மனிதர்களின் குணங்களை என எல்லாவற்றையும் கலந்து பேசுகிறது. அற்புதமான திரைக்கதையாகவும் இருந்தது. அதன் பிறகு அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நன்றாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கிறார்களே என்று சொன்னபோது, அவர் அதனை இப்படித்தான் படமாக்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருக்கின்றேன் என்றார்.
வேலூர் மாவட்டத்தின் கொளுத்தும் வெயிலுடனும், வியர்வையுடனும் கூட்டமாக தான் பதிவு செய்ய வேண்டும் என்றார். அவருடைய பேச்சில் தெரிந்த உறுதியை பார்த்து இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என சிலப்பதிகாரம் சொல்கிறது. நீங்கள் ஜனநாயகம், சமத்துவம் என்று சொல்லக்கூடிய ஒரு கருத்தியலை, ஒரு அரசியல் கட்சியிடம் ஒரு அமைப்பிடம் தராமல், மக்களிடம் தந்தால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் ஜனநாயகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள்? ஒரு எளிய மனிதனிடம் அதிகாரம் சென்று சேரும் போது அதை அவன் எப்படி உள்வாங்கிக் கொள்கிறான் ? எப்படி அதை பயன்படுத்துகிறான்? என்பதை இப்படம் சொல்கிறது. ஆனால் ஒரு எளிய மனிதன், எளிய மனிதனாக இருக்க இந்த சமூகம் விடுவதில்லை. குடும்பம் விடுவதில்லை. அவனுக்கு நெருக்கடியை தருகிறது. இவை எல்லாம் சேர்த்து தான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என நான் கருதுகிறேன். ஜனநாயகம் என்றால் என்ன? என்ற கேள்வியை இந்த திரைப்படம் நிச்சயம் மக்களிடத்தில் எழுப்பும் என்றும் நான் கருதுகிறேன்.
திரைப்படம் என்பது கலைகளின் கூட்டு முயற்சி. அதுபோன்ற தளத்தில் எழுத்தாளர்கள் பணியாற்றும்போது அது இன்னமும் மேம்படும். வேறு வகையிலான அடுக்குகளுடன் முன்னேற்றம் பெற்று மக்களிடம் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த எலக்சன் திரைப்படம் ஒரு யதார்த்தமான திரைப்படமாக அரசியலை தீவிரமாக பேசக்கூடிய அதனை எளிய மனிதரின் பார்வையிலிருந்து பேசக்கூடிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயமாக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். மக்களும், ரசிகர்களும் இதனை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
படத்தின் நாயகனான விஜய்குமார் பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு, இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம். அமாவாசை போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது.
இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது. எனது முந்தைய திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்தை வெளியிட்ட என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் தமிழ் பேசுகையில், புகழ், பணம், போதை, பெண் இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன். எனது இயக்கத்தில் வெளியான ‘சேத்து மான்’ படத்திற்காக ஆதரவளித்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.
சேத்துமான் திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டது. இந்தப் படம் அது போல் எளிதாக தொடர்பு கொள்ளுமா ? கொள்ளாதா ? என்ற அச்சத்தில் தான் இங்கு நான் நிற்கிறேன். இங்கு படத்தைப் பற்றி பேசியவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கோணத்தில் பேசினார்கள். அதனால் படத்தைப் பற்றி நான் ஒரு விசயத்தை கூட சொல்லப் போவதில்லை. நீங்கள் படத்தை பாருங்கள். பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள். ஒரு படத்தை நிறைவு செய்த பின் ஒரு மாதம் வரை எதைப் பற்றியும் சிந்திக்காமல் இயல்பாக இருப்பேன். இதுதான் என்னுடைய வழக்கம். ஒரு மாதத்திற்கு பிறகு புதிய கதை, புதிய உலகம், அவற்றில் நுழைந்து விடுவேன்.
நான் விஜயகுமாரிடம் படத்தின் திரைக்கதையை கொடுக்கும்போது வசனத்தில் ‘ஸ்லாங்’ இல்லை. மேலும் வசனங்களில் அழுத்தம் வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக உதவியவர் தான் எழுத்தாளர் அழகிய பெரியவன். அவரை எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் அறிமுகப்படுத்தினார். அவர் படத்திற்கு வசனம் மட்டும் எழுதவில்லை படக்குழுவினருடன் இணைந்து ஆர்வமுடன் பயணித்து பல படப்பிடிப்பு தளங்களை அடையாளம் காட்டினார். படம் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது கூட உடனடியாக அவர் விளக்கம் அளித்தார். அத்துடன் மட்டும் இல்லாமல் எழில் எனும் நல்ல மனிதர் ஒருவரையும் அவர் அடையாளம் காட்டினார். இவரும் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாதது. இந்த படத்தின் மூலம் நான் சம்பாதித்தது இந்த ஒரு மனிதரை மட்டும்தான். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.