“மழை பிடிக்காத மனிதன்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் விஜய் மில்டன் பேசுகையில், இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனியிடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘கருடன்’, ‘மகாராஜா’ என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும் என்றார்.
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், படங்களின் வசூலை பொருத்தவரை தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது. திரையரங்கிற்கே வராதீர்கள் என்றோ, தரம் தாழ்ந்தோ தயவு செய்து ஊடகங்கள் விமர்சனம் செய்து பார்வையாளர்களை வரவிடாமல் செய்து விடாதீர்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் போலதான். உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. விஜய் மில்டன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனி தலைகனம் பிடிக்காத மனிதர். அவருடைய கடின உழைப்பிற்கு இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உங்கள் ஆதரவு அதற்கு தேவை என்றார்.
இயக்குநர் சசி பேசுகையில், ரோமியோ படத்திற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிக்க ஆரம்பித்த படம் இது. கதையின் மீதும் இயக்குநர் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்’ எனப் படத்தின் டைட்டில் சொன்னபோது பலர் மாற்ற சொல்லி சொன்னார்கள். ஆனால், அந்த டைட்டிலை மாற்றாமல் நம்பிக்கை வைத்தவர் விஜய் ஆண்டனி. அதுபோலதான் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவாக இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், என் நண்பர் விஜய் மில்டனுடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். ‘பிச்சைக்காரன்’ படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான். சத்யராஜ், சரண்யா, முரளி ஷர்மா, டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார். இசை, கேமரா என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைதான் அழிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்ன விஷயம் பிடித்திருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. ஜூலை மாதம் படம் வெளியாகும் என்றார்.