“போட்” திரைப்படத்தின் டீசர் & முன்னோட்டம் வெளியீடு !

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேண்டஸி, காமெடி என வித்தியாசமான வகையில் இருக்கும். இந்த படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார்.  அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்த கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை.‌

கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய ‘கசடதபற’ எனும் படைப்பு  வெளியானது. அந்தத் தருணத்திலேயே ‘போட்’ கதையை எழுதிக் கொண்டிருந்தேன்.‌ இந்த கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, ‘இதில் இடம் பெறும் உணர்வும், வித்தியாசமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதனை என்னிடம் விவரித்தது போல் படமாக உருவாக்கி தாருங்கள்’ எனக் கேட்டுக் கொண்டார். என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சொன்ன அந்த வார்த்தை தான் இதன் தொடக்க புள்ளி.

இந்தப் படத்தில் நானும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறேன்.‌ இந்த கதைக்கு யார் நாயகன் என தேடும்போது நான் ஏற்கனவே யோகி பாபுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்து இக்கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. ‘இதில் நான் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்றன.

யோகி பாபுவை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். கௌரி கிஷன் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுக்கு நிகராக என்னுடைய இனிய நண்பர் எஸ். ஆர். கதிர் மூலம் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அறிமுகமாகி, எங்களுடன் இணைந்தார்.
இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை இசையும் , ஒளிப்பதிவும் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.‌ அனைவரையும் போல நானும் கடல் என்றால் அதன் கரையில் நின்று பார்த்ததை நினைத்துக் கொண்டும், உற்சாகம் மிகுதியானால் கூடுதலாக பத்து அடி உள்ளே சென்று நீராடவும் மட்டும் தான் தெரியும். அதனால் இந்த படத்தில் என்ன கஷ்டங்கள் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே என்னுடைய குழு வலிமையானதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

மாதேஷிடம் முதன்முறையாக சந்தித்து உரையாடிய போது, ‘இதில் நாம் ஏராளமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்’ என்று சொன்னேன். அந்தத் தருணத்தில் நான் எந்த படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று பார்வையிட்டு தேர்வு செய்யவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து கதையை மட்டும் ரசித்து ரசித்து எழுதினேன்.‌

கதை எழுதுவது எளிது. அதனை செயல்படுத்தும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் தான் அதன் கடினம் தெரியும். எழுதிய கதையை காட்சிப்படுத்துவதற்காக குழுவாக நிறைய மெனக்கடல் இருந்தது.  இது கடினம் என்று தெரியும். இருந்தாலும் விரிவாக இதைப்பற்றி சிந்திக்கவில்லை.‌

இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சந்தானம் இன்று நம்மிடம் இல்லை. மறைந்துவிட்டார். இருந்தாலும் அவர்தான் இந்த கதைக்கான காட்சிப்படுத்துதலின் அடித்தளத்தை உருவாக்கினார்.‌

கதைப்படி போட் மூன்று நாள் கடலுக்குள் இருக்கும். இதனால் நடிகர்களுக்கு உடை பற்றிய கவலை இல்லை.  அனைவருக்கும் ஒரே உடை தான். ஆனாலும் படப்பிடிப்பின் போது நடிகர்கள் அணிந்திருந்த ஆடை பாழானது. இந்த விஷயத்தில் நட்சத்திரங்கள் கஷ்டப்பட்டனர்.‌

இந்தப் படத்தின் திரைக்கதைக்கு 1943ம் ஆண்டு காலகட்டத்திய பின்னணியை அமைத்திருந்தோம்.‌ ஏனெனில் பொதுவாகவே வரலாற்றில் நம் விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை மும்பையையும், டெல்லியையும் முதன்மைப்படுத்தும் அளவிற்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டு கொள்வதில்லை.‌ ஆனாலும்
பரவாயில்லை, இது தொடர்பாக நம் வரலாறு குறித்து ஆய்வு செய்ய தொடங்கினேன். குறிப்பாக இரண்டாம் உலக போர்.‌

1943ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் பார்வையிட தொடங்கினேன்.‌ இதில் திரைப்படங்களையும் இணைத்துக் கொண்டேன். டொரண்டீனோவின் ஆங்கில திரைப்படத்திலிருந்து பல திரைப்படங்கள் வரை இரண்டாம் உலகப்போர் குறித்த குறிப்புகளில் எதிலும் இந்தியர்கள் இடம்பெறவில்லை.  ஆனால் சரித்திரத்தின்படி இரண்டாம் உலகப்போரில் 25 லட்சம் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல்.  இதிலிருந்து உந்துதலை பெற்று இரண்டாம் உலக போர் பற்றிய ஒரு கதை கருவினை உருவாக்கி, அதனை படைப்பாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.‌

அந்த காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் குண்டு வீச தயாராக இருந்திருக்கிறது. இதற்கான எச்சரிக்கை வெளியாகி ஆறு மாத காலம் வரை மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பெங்களூரூவில் உள்ள நண்பர் ஜெயராஜ் ஆகியோருடன் விவாதிக்கத் தொடங்கி, தகவல்களை சேகரிக்கத் தொடங்கினோம்.

அந்தத் தருணத்தில் சென்னையிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து எழுபது சத மக்கள் வெளியேறி விட்டார்கள். மீதமிருந்த மக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பதுங்கு குழிகளில் பதுங்கியபடி வாழ பழகியிருந்தார்கள்.  இது தொடர்பாக மக்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து இருந்தனர். எந்த அரசு அலுவலகமும் செயல்படவில்லை. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இவை அனைத்தும் ஒரு பொது இடத்தில் வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து, விவாதித்து அதன் பிறகு இது தொடர்பாக படைப்பை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில் துடுப்பு படகு தான் இருந்தது. 1980களுக்கு முன்னர் வரை துடுப்பு படகைத் தான் மீனவர்கள் பயன்படுத்தினார்கள்.

துடுப்பு படகை உருவாக்குவதற்கு கலை இயக்குநர் சந்தானம் கேரளா, ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து படத்தில் இடம்பெற்ற துடுப்பு படகை வடிவமைத்தார்.

இந்தக் கதையை எழுதும் போது நன்றாக இருந்தது. ஒரு படகில் பத்து பேர் அமர்ந்திருக்கிறார்கள் என எழுதினேன். ஆனால் இதனை படமாக்கும் போது என்னைவிட நடிகர்கள் சிரமப்பட்டார்கள்.  நாங்கள் வடிவமைத்த  ‘போட்டில் நடிகர்கள் அமர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்களால் நகரவோ.. அசையவோ இயலாது. அந்த அளவிற்கு நெருக்கடியாக இருந்தது.

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை தேடி தமிழக கடற்கரையோரம் முழுவதும் பயணித்தோம். இறுதியாக திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள உவரியை தேர்ந்தெடுத்தோம். அங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினோம்.

அடர்ந்த வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், உயர்ந்த மலைப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். அங்கெல்லாம் கடினம் இருந்தாலும், பிறகு பழகிவிடும். ஆனால் கடல் என்பது ஒவ்வொரு நிமிடமும் புதிராக இருந்தது. எதையுமே தீர்மானிக்க இயலாது. முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

மாதேஷ் ஒரு காட்சியை படமாக்க தொடங்குவார். அதை காட்சிப்படுத்துவதற்குள் கடல் அலையின் காரணமாக நட்சத்திரங்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைவு செய்ய இயலாது. எங்களுக்கும், கடலுக்கும் இடையேயான ஒரு ரிதம் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் ஆனது. 

நடிகர்களுக்கு நீச்சல் தெரியாது.‌ தொழில்நுட்ப குழுவினர்களில் பலருக்கும் நீச்சல் தெரியாது. அதனால் அந்த மீனவ கிராமத்தில் உள்ள இளைஞர்களை எங்களுக்கு உதவியாக அமர்த்திக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக தொடர்ச்சியாக தண்ணீரில் இருந்ததால் அவர்களின் கை கால்கள் எல்லாம் ஊதி வெளுத்து விட்டன. ஏராளமான தருணங்களில் படப்பிடிப்பிற்கான உபகரணங்கள் வீணாகி இருக்கின்றன. இப்படி தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டோம்.

ஒரு அலை வந்தால் எங்களுடைய எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஒரு காட்சியை நிறைவு செய்வதற்குள் சூரிய ஒளியில் நிறைய மாறுபாடு ஏற்படும்.

நடிகர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக இருந்தது. எனக்கு கடலுக்குள் இறங்கினாலே தலை சுற்றி விடும். ஆனால் நடிகர்கள் இவற்றையெல்லாம் கடந்து, படகில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் கடின உழைப்பால் உருவாகி இருக்கிறது. நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவினரும் வியர்வை சிந்தி உழைத்திருக்கிறார்கள்.‌

இப்படத்தின் படப்பிடிப்பு பெரிய அனுபவமாக இருந்தது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை கடல் என்பதை தனி உயிரினமாகத் தான் பார்க்கிறேன். சில நேரங்களில் கோபமாக இருக்கும். சில நேரங்களில் அமைதியாக இருக்கும். கடலின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் தொடங்கி மாலைக்குள் இருபது  வண்ணங்களை காணலாம். நாங்கள் எதை எல்லாம் சந்தித்தோமோ எங்களது அனுபவம் என்னவாக இருந்ததோ.. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த திரைப்படம் சுவாரசியமாக இருக்கும். அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

நடுக் கடலுக்கு சென்று படம் எடுத்தால் யார் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். நாங்கள் மட்டும்தான் கஷ்டப்பட்டு படமாக்கினோம் என்று சொல்ல வரவில்லை. கடல் என்று சென்றாலே கஷ்டம் தான்.‌

நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கியது ஒரு பாதி தான். மீதி பாதியை சென்னையில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கினார். ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். படத்தை பார்ப்பதற்கு முன் அதைப்பற்றி அவர் பேசியதற்கும் படத்தை பார்த்த பிறகு கதையை உள்வாங்கி அவர் பணியாற்றிய விதமும் வித்தியாசமாக இருந்தது. கதைகளை அவர் உள்வாங்கி இசை மூலமாக வெளிப்படுத்தும் போது சிறப்பாக இருக்கும். ஒரு வகையில் பார்க்கும் போது, இது சிங்கிள் லொகேஷனில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும். அதை உடைத்து இசை வடிவில் ஒரு கதையை சொல்லி ரசிகர்களை அவர் வழி நடத்தும் விதம் பிரமிக்க வைத்தது. உண்மையிலேயே இந்த படத்தில் அவருடைய பங்களிப்பு சிறப்பானது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. படத்திற்கு  வண்ணக் கலவையை சீராக்கும் பணியை மேற்கொண்ட கலரிஸ்ட் பாலாஜியின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.  இவர் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கதையை செழுமை படுத்தினார். சுரேன் மற்றும் அழகியகூத்தன் ஆகிய இரண்டு தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து ஒலி வடிவமைப்பில் சிறப்பாக பணியாற்றினார்கள். என்னுடைய குழுவின் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, யோகி பாபு நடிக்க ஒப்புக்கொண்டு, அவருடன் இத்தனை நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து பணியாற்றி நல்லதொரு படைப்பாக ‘போட்’டை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button