பார்வதி நாயருக்கு பாடம் புகட்டிய உதவி இயக்குநர்…
அஜீத் குமார் நடிப்பில் வெளியான ’என்னை அறிந்தால்’, கமல்ஹாசன் நடித்து வெளியான ‘உத்தம வில்லன்’, விஜய்யின் தி கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். இவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி, செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடங்களாகப் பணிபுரிந்து வந்த சுபாஷ் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் சுபாஷ் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பார்வதி நாயர் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுபாஷ். மேலும் அவர் வேலை செய்யும் போது தன்னை துன்புறுத்தியதாகவும், தான் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்வதி நாயர், உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 7 பேர் தன்னைத் தாக்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட பார்வதி நாயர் உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி பார்வதி நாயர் மற்றும் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருண் முருகன், அஜித் பாஸ்கர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக சுபாஷ் சந்திரபோஸிடம் பேசிய போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எல்லைப்பட்டி தான் என் சொந்த ஊர். சினிமா ஆசையில் ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன். 2020 ஜூன் 17 ஆம் தேதி தாயாரிப்பாளர் கோட்டபட்டி ராஜீ அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அலுவலக பணிகளை கவனித்துக் கொண்டு, பார்வதி நாயர் நடித்து வந்த ரூபம் படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்தேன். அப்போது நடிகை பார்வதி நாயரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். வீடியோ எடுக்கவும் வீடியோ எடிட்டிங்கும் எனக்கு தெரியும் என்பதால் அவருக்காக வேலை செய்யச்சொன்னார்கள். நானும் அந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.அதனால் அவர்களிடம் லீவ் கேட்டேன்.ஏற்கெனவே தயாரிப்பாளர் கோட்டபட்டி ராஜீவிடம் கூறிவிட்டேன். உங்களிடமும் சொல்கிறேன் என்று சொன்னேன். ஒரு வேலைக்காரன் நீ என்னை எதிர்த்துப் பேசுவதா? என்று கோபப்பட்டார்கள். சினிமாவில் வேறு எங்கும் வேலைக்கு சேர்ந்து விடக்கூடாது என்று என் மீது பொய்யான திருட்டு கேஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குடுத்தாங்க (304/2022.செக்சன் 381), ஒன்றரை வருசம் எதுவுமே செய்யாம இருந்தாங்க. நானே உயர்நீதிமன்றத்தை அணுகி அந்த வழக்கை முடிக்கச் சொல்லி முறையிட்டேன் என்றவரிடம், திருட்டு வழக்கில் உங்களைக் கைது செய்ததாக தகவல் வெளியானதே என்ற போது அந்த வழக்கில் என்னை கைது செய்யவில்லை, திருட்டுப் போனது என்று சொன்ன பொருட்களோட விவரத்தைக் கூட பார்வதி நாயர் கொடுக்கல. அதனால் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட எல்லோர் பற்றியும் நான் புகார் கொடுத்தேன். அந்த விசாரணையில் அந்த கேஸ் முடிந்துவிட்டது. அவர் எதுவும் திருடவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பின், இரண்டாவதாக திருடப்பட்ட கருவிகளில் இருந்த கண்டெண்டை நான் சோசியல் மீடியாவில் லீக் செய்துவிட்டேன் என்று புகார் கொடுத்தார்கள். திருடவே இல்லை என்று வழக்கு விசாரணையில் முடிவான பின்பு, இப்படி ஒரு புகார் கொடுக்கிறாங்க.
26.10.22 இல் நான் நடிகை பார்வதி நாயர் மீது ஒரு புகார் கொடுக்கிறேன். அன்னைக்கு இரவே நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து என்ன அடிக்கிறாங்க, பார்வதி நாயர் என் மேல் எச்சில் துப்பிவிட்டு நீ என்னையே எதிர்க்கிறியா? என்று சொல்லிகிட்டே, இவன கொல்லுங்கடா என கத்தறாங்க. உடனே நான் லோக்கல் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது கொடுத்த புகாரை வாங்க மறுத்து விட்டனர். அதனால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். மூன்று நாட்கள் கழித்து சிஎஸ்ஆர் போடறாங்க. அப்புறம் அவங்க ஆறு பேரும் மன்னிப்பு கேட்டாங்கன்னு சொல்லி கேஸ முடிச்சாங்க. ஆனா அப்படி நாங்க சொல்லவே இல்லைன்னு கோர்ட்ல சொல்றாங்க. இதுல போலீஸ் அதிகாரி சீட்டிங் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சது. அத நிரூபிச்சி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவு வாங்கினேன்.
முப்பது நாளாகியும் ஆக்சன் எடுக்கல.அவங்க இந்த வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்துக்கு போனாங்க.ஆனா அங்கேயும் என் புகார் சரி என்று சொல்லி அதன் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாங்க. அந்த ஆர்டர் வந்து இருபது நாளாகியும் நடவடிக்கை எடுக்கல. நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவில்லை என்று மாநகர காவல் ஆணையரை பார்த்து முறையிட்டேன்.
இது சம்பந்தமாக நடிகை பார்வதி நாயர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சில தவறான தகவல்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன. நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக எனது சட்டக்குழு நடவடிக்கை எடுக்கும். விரைவில் உண்மை வெளிவரும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். றீ