சமையல் கலைஞரின் சினிமா ஆசை.. கை கொடுக்கும் யோகிபாபு..!
சமையல் கலைஞராக தமிழகத்தில் பிரபலமடைந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அரசியல், சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சிகளில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் என்பது கௌரவமாக கருதப்பட்டு வருகிறது.
சாதரண சமையல் தொழில் என கூறப்பட்டு வந்ததை கார்ப்பரேட் மயமாக்கி, கௌரவமான தொழிலாக மாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆசையில் தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். எழுத்தாளரும், இயக்குநருமானராஜு முருகன் திரைக்கதை எழுதிய இந்தப்படத்தை சரவணன் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார் என விளம்பரங்கள் வெளியானாலும் அதற்கான மொத்த முதலீட்டிற்கும் பொறுப்பேற்று கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மெஹந்தி சர்க்கஸ் படத்தை மாதம்பட்டி ரங்கராஜ் சகோதரர் சரவணன் இயக்கியதாக அறிவிக்கப்பட்டாலும் ராஜுமுருகன் மேற்பார்வையில் அனைத்தும் நடைபெற்றது. அதனால் மதம், அரசியல் சார்ந்த காட்சிகள் அதிகம் இடம்பெற்ற மெஹந்தி சர்க்கஸ் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் கடும் நெருக்கடிகளை சந்தித்தது. வணிக ரீதியாக தோல்வியை தழுவியது மெஹந்தி சர்க்கஸ். தற்போது குக்கு வித் கோமாளி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ், லதா ஆர்.மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிஸ் மேகி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மாதம் பட்டி ரங்கராஜுடன், யோகிபாபு, ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் அறிவிப்புடன், படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. யோகி பாபு ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் நடித்திருக்கும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளதால்’ மிஸ் மேகி’ திரைப்படம் கவனத்திற்குள்ளாகியுள்ளது.