முருகதாஸால் வீணடிக்கப்படும் சிவகார்த்திகேயன் கால்ஷீட்

சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படம் குறித்து செப்டம்பர் 25.2023 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்த பதிவில்…

எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். படப்பிடிப்பைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

அதற்குப் பின்னால் சில மாதங்கள் கழித்து, ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படத்தின் தொடக்கவிழா பிப்ரவரி 14, 2024 அன்று எளிமையாக நடந்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.

இந்தப்படத்தில் நாயகியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் அறுபது நாட்கள் விட்டு விட்டு நடந்துள்ளது என்கிறார்கள். இன்னும் சுமார் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தி நடிகர் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் எனும் இந்திப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஏ.ஆர்.முருகதாசுக்கு வந்தது.

எஸ்.கே 23 படத்தை முடித்துவிட்டு அந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை. இதனால் இன்னும் சுமார் முப்பது நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கும்போதே சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு இங்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தனராம். ஆனால் அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டுத்தான் எஸ்.கே 23 படத்துக்கு வருவார் என்றாகி விட்டதாம்.

இந்தப்படத்துக்கு அடுத்து வரிசையாகப் படங்களை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். முருகதாசின் இந்த முடிவால் அடுத்தடுத்த படங்களைத் தொடங்கப் போட்டிருந்த திட்டம் எல்லாம் குழப்பமாகி விட்டதாம்.

இதனால், இவருக்குப் படமே இல்லாதபோது நான் தேதி கொடுத்தேன் இப்போது சல்மான்கான் படம் வந்ததும் இப்படிச் செய்யலாமா? என்று சினம் கொண்டிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இன்னொரு பக்கம், நான் படப்பிடிப்புக்குத் தயார் என்று சொன்ன பிறகும் சுமார் மூன்று மாதங்கள் வரை காக்க வைத்தார் சிவகார்த்திகேயன். அது அவருடைய சூழ்நிலை என்று புரிந்து நான் காத்திருந்தேன். இப்போது என் சூழல் இப்படி இருக்கிறது. அவர் காத்திருக்கக் கூடாதா? என்கிறாராம் ஏ.ஆர். முருகதாஸ். சிவகார்ததிகேயன் படம் முடிவடையாமல் இருக்கும்போது அங்கு போக வேண்டிய கட்டாயம் என்ன என்றால்? சிவகார்த்திகேயன் படத்தில் முருகதாசுக்கு சம்பளம் இருபதுகோடியாம். சிக்கந்தர் படத்தில் அவருடைய சம்பளம் முப்பத்தைந்துகோடியாம்.

அப்படின்னா அவங்க சொல்வதைக் கேட்டுத்தானே ஆகவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button