சிவ கார்த்திகேயனின் “அமரன்” படத்தின் திரைவிமர்சனம்
ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமரன்”.
கதைப்படி.. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் ( சிவ கார்த்திகேயன் ) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவரது தாய் கீதாவுக்கு ( கீதா கைலாசம் ) மகன் ராணுவத்துக்கு செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால் முகுந்த் வரதராஜனின் காதலி இந்து ரெபேக்கா ( சாய் பல்லவி ) துணை நிற்கிறார். பின்னர் ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் சென்று தனது திறமையின் காரணமாக கேப்டன், மேஜர் என உயர் பதவிகளை அடைகிறார்.
கேரளாவிலிருந்து சென்னையில் படிக்க வந்த இடத்தில் முகுந்துடன் ஏற்பட்ட காதலை இந்துவின் பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள். முகுந்த் ராணுவத்தில் பணிபுரிவதால் மகளின் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்பதால் மறுக்கிறார்கள். பின்னர் இருவரும் சமாளித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.
பின்னர் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க RR -44 தனிப்படைக்கு தலைமை பொறுப்பில் நியமிக்கப்படும் மிகுந்த், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சாதித்தாரா என்பது மீதிக்கதை..
காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. முகுந்த், இந்து இருவருக்குமான காதல், உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்கள் என அனைத்து காட்சிகளும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
சிவ கார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் “அமரன்” திரைப்படம் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். அதேபோல் காதல், மனைவி, தாய் என பல்வேறு பரிமாணங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சாய் பல்லவி. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையர் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.