ஜெயம் ரவியின் “பிரதர்” படத்தின் திரைவிமர்சனம்
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரதர்”.
கதைப்படி.. வழக்கறிஞர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சட்டம் பேசி ஊர் வம்பை விலைக்கு வாங்கி திரிகிறார் கார்த்திக் ( ஜெயம் ரவி ). இவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினை சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்ததால் தாய், தந்தைக்கு பிரச்சினை ஏற்படுகிறது.அங்கு இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அவரது தந்தை. அவரைப் பார்ப்பதற்காக ஊட்டியிலிருந்து வரும் அவரது அக்கா பூமிகா, கார்த்தியை திருத்துவதற்காக ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.
அக்கா வீட்டுக்கு சென்றதும் கார்த்தியின் செயல்பாடுகளால், அந்தக் குடும்பமே அமைதி இழந்து சின்னாபின்னமாகிறது. அப்போது அவரது தாய், தந்தை அங்கு வருகிறார்கள். கார்த்திக் பற்றிய சில உண்மைகளைக் கூறி, குடும்பத்தை ஒன்று சேர்க்காமல் என்னை அப்பா என அழைக்கக் கூடாது எனக்கூறி சென்னைக்கு செல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் கார்த்திக். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பது மீதிக்கதை..
குடும்பத்தில் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், குடும்ப உறுப்பினர் பேசினால் ஏற்படும் சிக்கல்களை சொல்வதற்காக, எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. ராஜேஷின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில், இந்தப் படத்தில் சுவாரஸ்யம் குறைவுதான்.
கலகலப்பு, லூட்டி, எமோஷன் என நடிப்பில் வித்தியாசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், சரண்யா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் சிரிக்கக் தோன்றுகிறது. மற்றபடி ராஜேஷ் படம் என்றால் காமெடி இருக்கும் என நினைத்துச் சென்றால் ஏமாற்றமே !