தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போன செல்வராகவன்
தற்கொலை எண்ணம் பற்றியும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் இயக்குநர் செல்வராகவன் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் செல்வராகவன் கடைசியாக தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து செல்வராகவன் புதிய படத்தை இயக்கவுள்ளார், அதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
செல்வராகவன் திரைத்துறையில் மட்டுமல்லாமல் சமூகக் கருத்துக்களையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும், தன் வாழ்வில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் அதிலிருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் பேசி வருகிறார். அந்த வகையில் தற்கொலை எண்ணம் பற்றியும், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்தும் செல்வராகவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பேசியிருப்பதாவது,
‘வாழ்க்கையில் உலகம் முழுவதும் பார்த்தால் கூட இந்த ஸ்டேஜை தாண்டாதவர்கள் இருக்க முடியாது. அது என்னவென்றால் தற்கொலை முயற்சி மனஅழுத்தம் தான். நான் ஏழு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். ஆனால் இப்போது கிடையாது. ஒவ்வொரு முறையும் ஆழமான ஒரு குரல் உள்ளிருந்து கேட்கும். பொறுமையாக இரு.. பொறுமையாக இரு என்று அந்தக் குரல் என்னுள் கேட்கும். எதுவோ சொல்வது போல் இருக்கிறது என்று நான் விட்டுவிடுவேன்.
திடீரென்று 6 மாதம் கழித்து நாம் நன்றாக இருக்கும் போது அப்போது உணர்வோம். நாம் அப்போது தற்கொலை செய்திருந்தால் இன்று இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைத்திருக்குமா என்று. தற்கொலை செய்பவர்களின் முதன்மையான சிந்தனை எதுவென்றால் அடுத்த பிறவியிலாவது நிம்மதியாக நல்ல பிறப்பு பிறக்க வேண்டும் என்பது தான். ஆனால் யாருக்குத் தெரியும், கூவத்தில் திரியும் பன்றியாகப் பிறக்கிறோமா என்று செத்த பிறகு தெரியவா போகிறது.
தற்கொலைக்கு நிறைய பேர் சொல்வது மன அழுத்தம் மட்டுமே.. நான் நிறைய முறை கூறியிருக்கிறேன். நீங்கள் மனஅழுத்தத்தில் இருந்தால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று தைரியமாகக் கூறுங்கள். ஒருவாரத்தில் ஓடி விடும். எந்த விஷயத்திலும் சண்டை போடக் கூடாது. ஆமாம் எனக்கு மன அழுத்தம் உள்ளது என்று ஒப்புக் கொண்டு செயல்பட்டால் அதுவாகவே சரியாகிப் போய்விடும். தீர்வு இல்லாத பிரச்சினைகளே கிடையாது’ இவ்வாறு அந்தப் பதிவில் செல்வராகவன் கூறியிருக்கிறார்.