படப்பிடிப்பை தொடங்கிய பாண்டிராஜ் – விஜய் சேதுபதி கூட்டணி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. இறுதியாக சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.
திரையுலகில் புதிய படங்கள் தொடங்கப்படாது என்ற பேச்சு நிலவியதால், சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்தியது படக்குழு. தற்போது திருச்செந்தூரில் பூஜை போடப்பட்டு, படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சில் தொடங்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் கூறும்போது, “நானும், விஜய் சேதுபதியும் இணையும் படத்தின் படப்பிடிப்பை திருச்செந்தூரில் தொடங்கியுள்ளோம். திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெறும் என்றார்.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தினை இயக்குகிறேன். இந்தக் கதைக்கு அவ்வளவு நாட்கள் தேவைப்பட்டது. இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் இப்படத்தின் கதை இருக்கும். இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு முறையாக தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.